முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.111 கோடி குவிந்தது
சென்னை: தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.111 கோடியே 8 லட்சத்து 22 ஆயிரத்து 745 ரூபாய் சேர்ந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக பெய்த தொடர் மழை, சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. பலரும் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் பல்வேறு மாநில அரசுகளும், தொழில் நிறுவனங்களும், நடிகர், நடிகைகளும் தற்போது நிவாரண நிதிகளை வழங்கி வருகின்றனர். இதுவரை வழங்கப்பட்டுள்ள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதி ரூ.111 கோடியை எட்டியுள்ளதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் குரல் நிதி
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, மக்கள் குரல் மற்றும் ட்ரினிட்டி மிரர் சார்பில் மொத்தம் 6 லட்சம் ரூபாய், என்.ஏ.சி, ஜுவல்லர்ஸ் 25 லட்சம் ரூபாய், வழங்கப்பட்டுள்ளது.

கரூர் வைஸ்யா வங்கி
கரூர் வைஸ்யா வங்கியின் 2 கோடி ரூபாய் மற்றும் வங்கி பணியாளர்களின் ஒருநாள் சம்பளமான 1 கோடி ரூபாய் என மொத்தம் 3 கோடி ரூபாய் இன்று வழங்கப்பட்டது.

குவியும் நிவாரண நிதி
செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம் 3 கோடி ரூபாய், கோயம்புத்தூர், லஷ்மி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் 2 கோடி ரூபாய், சக்தி மசாலா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1 கோடி ரூபாய், ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1 கோடி ரூபாய் வழங்கின.

ஜெயலலிதாவிடம் நேரில் நிதி
மேலும், நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1 கோடி ரூபாய், கோயம்புத்தூர், பி.எஸ். கோவிந்தசாமி நாயுடு & சன்ஸ் தொண்டு நிறுவனம் 1 கோடி ரூபாய் அளித்தன. தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மொத்தம் 12 கோடியே 31 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று முதல்வர் ஜெயலலிதாவிடம் அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.111 கோடி
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 111 கோடியே 8 லட்சத்து 22 ஆயிரத்து 745 ரூபாயாகும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications