சட்டசபை நிகழ்ச்சிகளை ஏன் "லைவ்" ஆக ஒளிபரப்ப முடியாது? ஹைகோர்ட் கேள்வி
சென்னை: ராஜ்யசபா, லோக்சபா நிகழ்வுகளைப் போல தமிழக சட்டசபையில் நடைபெறும் நிகழ்வுகளையும் நேரடியாக பார்க்க முடியுமா? என்ற ஏக்கம் மக்களுக்கு நீண்டகாலமாக இருந்து வருகிறது. தற்போது டிவியில் ஒளிபரப்பாகும் சட்டசபை காட்சிகள் அனைத்து எடிட் செய்யப்பட்ட பின்னரே தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
சட்டசபையில் நடைபெறும் சூடான விவாதங்கள்.... சண்டைகள் என அனைத்தையும் சுடச் சுட தெரிந்து கொள்ளலாம் என்ற ஆசையில், டி.ஜெகதீசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், நாடாளுமன்றத்தைப் போல, தமிழக சட்டபேரவை நிகழ்வுகளை பொதுமக்கள் தெரிந்துக் கொள்ளும் விதமாக அவற்றை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய அரசுக்கு உத்தரவிடவேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு புதன்கிழமை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முக்கியமான காட்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதாக அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.

நேரடி ஒளிபரப்பு முடியாதா?
விசாரணையின்போது, சட்டசபை நிகழ்ச்சிகளை டிவியில் ஏன் நேரலையாக ஒளிபரப்பக் கூடாது?. சட்டசபை நிகழ்ச்சிகளை முழுமையாக ஒளிபரப்புவதை எது தடுக்கிறது? லோக்சபா, ராஜ்யசபா நிகழ்ச்சிகள் நேர ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. நாடாளுமன்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது சட்டசபை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப என்ன சிக்கல்? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கேள்வி எழுப்பினார்.

அரசின் முடிவு
இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் தமிழக சட்டசபை நிகழ்வுகளை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய சாதகமான சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்து அரசிடம் கேட்டுத் தெரிவிப்பதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டசபையின் அதிகாரம்
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில்,
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவை பார்க்கும்போது, சட்டசபை நிகழ்வுகளை தொலைக்காட்சி அல்லது இணையதளத்தில் நேரடி ஒளிப்பரப்புச் செய்வது என்பது அரசின் கொள்கை முடிவு, தொழில்நுட்ப பணிகள், உட்கட்டமைப்பு வசதிகள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டதாக உள்ளது. இவையெல்லாம் பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யவேண்டியுள்ளது. அதேநேரம், இந்த முடிவு எடுப்பது என்பது தன்னாட்சி அமைப்பான மாநில சட்டசபையின் அதிகாரத்துக்கு உட்பட்டது.

சட்டம் கிடையாது
ஆனால், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் லோக்சபா மற்றும் ராஜ்யசபா நிகழ்வுகளை பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளும் விதமாக தனியாக தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்பட்டு, ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.
சாதகமான சூழ்நிலை எனவே, மாநில சட்டசபை நிகழ்வுகளை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்ப வேண்டும் என்றோ ஒளிப்பரப்பக் கூடாது என்றோ எந்த ஒரு சட்டமும் இல்லை.

வேண்டுமா? வேண்டாமா?
இப்போது எழுந்துள்ள கேள்வி, 10 ஆண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்ற நிகழ்வுகளை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பும்போது, தமிழக சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிப்பரப்ப வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான்.

ஜூலை 1க்கு ஒத்திவைப்பு
மேலும், இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, நாடாளுமன்றத்தைப் போல, விரைவில் தமிழக சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிப்பரப்பு செய்ய சாதகமான சூழ்நிலை எதுவும் உள்ளதா? என்பது குறித்து அரசிடம் கேட்டுத் தெரிவிப்பதாக கூறியுள்ளார். எனவே, இந்த வழக்கை ஜூலை 1-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications