ஜெ. கூட்டத்தில் 2 பேர் மரணம்: தமிழிசை கண்டனம் - தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு
சென்னை: ஜெயலலிதா பங்கேற்ற அதிமுக கூட்டத்தில் 2 பேர் உயிர்ழந்தது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கில் ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கு எந்த வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டினார்.

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியினர் நடத்தும் பிரச்சார கூட்டத்திற்கு எந்த கட்டுப்பாடும் விதிப்பதில்லை என்று கூறிய அவர், எதிர்கட்சியினருக்கு தேர்தல் அதிகாரிகள் பல கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
விருத்தாச்சலத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிரச்சாரக்கூட்டத்தில் இருவர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன். தேர்தல் கமிஷன் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழிசை கூறினார்.
திமுக.,வின் தேர்தல் அறிக்கை ஒரு மாயா ஜால அறிக்கை என்று குறிப்பிட்ட தமிழிசை சவுந்திரராஜன், எதை அமல் செய்ய முடியுமோ அதைப் பற்றி மட்டுமே பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவோம் என்றார்.
மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்று ஜெயலலிதா கூறுகிறார் எத்தனை வருடத்திற்குள் மதுவிலக்கு அமலுக்கு வரும் என்று உறுதியாக தெரிவிக்கவில்லை என்றும் தமிழிசை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications