தாங்களே பாதிக்கப்பட்டிருந்தாலும் சென்னை, கடலூர் வெள்ளத்திற்கு அள்ளி கொடுத்த தூத்துக்குடி மக்கள்
தூத்துக்குடி: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் தூத்துக்குடி கம்ப்யூட்டர் விற்பனையாளர்கள் சங்கம் பிக்ஸ்டாக் போட்டோ குழுமம் மற்றும் முகநூல் நண்பர்கள் மூலமாக நிவாரணப் பொருட்களை வழங்குமாறு 3ம் தேதி மாலை முகநூல் மற்றும் வாட்சப் மூலம் வேண்டுகோள் விடப்பட்டது.
ஒன்று அல்லது இரண்டு கார்களில் மக்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களிடம் சேர்ப்பது இவர்கள் திட்டம். ஆனால் 24 மணி நேரக் கெடுவுடன் துவங்கப்பட்ட இந்த சேவையில் தூத்துக்குடி வாழ் மக்கள் அளித்த ஆதரவு மலைப்பை ஏற்படுத்தியது.

அரிசி, உடைகள், உணவுப்பொருட்கள், குடிநீர், மருந்துகள், பாய்கள்... என ஏராளமான பொருட்களை, பெட்டி, பெட்டியாய்., மூட்டை மூட்டையாய் வந்து குவிந்தனர்.
வந்து குவிந்த நிவாரணப் பொருட்களை 20 அடி நீள கன்டெய்னர் லாரியில் ஏற்றினார்கள். அது நிரம்பி வழிந்ததால் வந்தது 2வது லாரி. அதுவும் முக்கால்வாசி நிரம்பிவிட்டது. வந்து குவிந்த நிவாரணப் பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சத்தை தாண்டும். இந்த வெள்ள நிவாரணப் பொருட்கள், மழை வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நாளை அப்பகுதியில் உள்ள மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இந்த சேவையில் தூத்துக்குடி வாழ் மக்கள் அளித்த ஆதரவு, அவர்களின் மனித நேயம் மலைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனைக்கும், சில நாட்கள் முன்புதான், தூத்துக்குடி நகரமே வெள்ளத்தால் சூழப்பட்டிருந்தது. அம்மக்களும் படகில் பயணித்தனர். அப்போது இதர பகுதிகளில் இருந்து பெரிய உதவிகள் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications