சட்டமன்றத்தில் வாக்கிங் செல்வதே வேலை.. இப்படியொரு ஆளுநர் நமக்கு தேவையா.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
செங்கல்பட்டு: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டமன்றத்தில் வாக்கிங் செல்வது மட்டும் தான் ஒரே வேலை என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 11 தோல்வி பழனிசாமியாக மாறுவார் என்றும் கூறியுள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு திமுக சார்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு தொகுதியிலாவது வெல்ல மாட்டோமா என்ற பிரதமர் நரேந்திர மோடி என்ன என்னமோ செய்து பார்த்தார்.

மோடி மஸ்தான் வேலையெல்லாம் செய்தார். கன்னியாகுமரியில் வந்து விவேகானந்தர் சிலையில் அமர்ந்து தியானம் செய்தார். பொங்கல் வைப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். ஆனால் மோடிக்கே பொங்கல் வைத்துவிட்டனர் தமிழ்நாடு மக்கள். அதுதான் தமிழ்நாடு. பொங்கல் வாழ்த்து தெரிவிப்பதற்காக மட்டுமல்லாமல், உங்களுக்கு என் நன்றியை கூறுவதற்காக முதல்வர் அனுப்பி வைத்துள்ளார்.
பொங்கல் மட்டும் தான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட பண்டிகை. பொங்கல் தமிழரின் பண்டிகை. மூட நம்பிக்கைகளுக்கும், கட்டுக்கதைகளுக்கும் இடம்கொடுக்காத பண்டிகை. இவ்வளவு சிறப்பான சமத்துவ விழாவை கொண்டாடக் கூடாது என்பதற்காகவே, பொங்கல் அன்று மத்திய அரசு தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டும் நடத்தினார்கள். அதற்கு கடுமையான எதிர்ப்பு தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டது.
நமது பண்பாட்டு அடையாளங்களை சிதைப்பது தான் மத்திய அரசின் நோக்கம். அதற்காகவே ஒருவரை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவர்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி. மக்களால் தேர்வு செய்யப்படாத ஒருவர், பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் பதிவியில் இருக்கிறார். ஆனால் நாம் ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றிவிடாதீர்கள். ஏனென்றால் எங்களுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்றோம்.
அவரின் வேலை என்ன.. தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரையை படிப்பது தான் வேலை. ஆனால் ஆளுநருக்கு சட்டமன்றத்தில் வாக்கிங் செல்வது மட்டுமே ஒரே வேலை. வருவார்.. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்.. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போய்விடுவார். சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று கூறினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பிடிக்காது, தமிழ்நாடு பிடிக்காது, பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் பெயர்கள் பிடிக்காது. இப்படியொரு ஆளுநர் நமக்கு தேவையா.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியான அதிமுக ஒரு கண்டன அறிக்கையாவது வெளியிட்டதா.. அதற்கு நேர்மாறாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எங்களை காட்டுகிறீர்களோ இல்லையோ ஆளுநரை டிவியில் காட்டுங்கள் என்கிறார்.
இதிலிருந்தே அதிமுக - பாஜகவின் கள்ளக்கூட்டணி தெரிகிறதா.. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக பிரிந்து வந்தார்கள். இம்முறை சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இணைந்து வருவார்கள். அதற்காக நம் பணி சுலபம் என்று சுணக்கமாக இருந்துவிட கூடாது. அடுத்த 14 மாதங்களில் திமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்திட வேண்டும்.
அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடக்கவுள்ளது. அதில் நாம் போட்டியிட போகிறோம் என்ற அறிவித்த உடன், அதிமுக விலகிட்டாங்க.. ஏனென்றால் அதிமுகவின் தோல்வி உறுதி செய்யப்பட்ட ஒன்று என தெரியும். இதுவரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த அத்தனை தேர்தல்களிலும் அதிமுக தோல்வி தான். இதனால் 10 தோல்வி பழனிசாமி என்கிறோம். வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்தால், அவர் 11 தோல்வி பழனிசாமியாக மாறப் போகிறார் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications