Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடிக்கு கறுப்புக்கொடி காட்ட தமிழக மக்கள் அனைவரும் கிளர்ந்து எழ வேண்டும்: வைகோ

மோடிக்கு கறுப்புக்கொடி போராட்டத்தில் மக்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காவிரி உரிமைகள் மீட்பு பயணம்

    சென்னை : தமிழகத்துக்கு ஏப்ரல் 12-ந் தேதி வருகை தரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட தமிழக மக்கள் அனைவரும் கிளர்ந்து எழ வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகின்றன.

    இந்நிலையில், ஏப்ரல் 12ம் தேதி ராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வர இருக்கும் மோடிக்கு எதிராக பெரிய அளவில் கறுப்புக்கொடி காட்ட தமிழக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

     தமிழகம் போர்க்கோலம்

    தமிழகம் போர்க்கோலம்

    அந்த அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்ற பின்னர் கடந்த 46 மாத காலமாக தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் பாஜக அரசுக்கு எதிராக தமிழக மக்கள் எரிமலையாக வெடித்து கொந்தளித்து வருகின்றனர். மோடி அரசைக் கண்டித்துத் தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர். தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் மரபு உரிமையைத் தட்டிப் பறித்து, கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக செயல்பட்டு மன்னிக்க முடியாத துரோகத்தை மோடி அரசு செய்து வருகிறது.

     காவிரியில் தமிழகத்திற்கு அநீதி

    காவிரியில் தமிழகத்திற்கு அநீதி

    காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், அலட்சியப்படுத்தியது மட்டுமின்றி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனம் ஆக்குவதற்கு நாசகாரத் திட்டங்களை செயற்படுத்த முனைந்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணலில் தடுப்பு அணைக் கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு மறைமுக அனுமதி வழங்கி, காவிரியில் சொட்டு நீர் கூட கிடைக்காமல் செய்வதற்கு சதித்திட்டம் வகுத்திருக்கிறது.

     மோடி - எடப்பாடி கூட்டு

    மோடி - எடப்பாடி கூட்டு

    காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் போராடி வரும் நிலையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன், பாறைப்படிம எரிவாயு போன்ற திட்டங்களை செயற்படுத்த, பன்னாட்டு அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரி மோடி அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 57500 ஏக்கர் விளை நிலங்களைக் கைப்பற்ற, மோடி அரசின் காலடியில் கிடக்கும் எடப்பாடி அரசு, 2017 ஜூலை 19ம் தேதி அரசாணை பிறப்பித்து இருக்கின்றது.

     தொடர் பிரச்னைகள்

    தொடர் பிரச்னைகள்

    மக்களின் கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், காவிரி டெல்டாவில் ஆழ்குழாய் எண்ணெய் கிணறுகளை அமைக்கும் பணிகளை தொடருகிறது. மத்திய அரசின் கெயில் நிறுவனம் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு எரிவாயு எடுத்துச் செல்ல கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களின் விளை நிலங்களில் எரிவாயு குழாய்களைப் பதிப்பதை எதிர்த்து விவசாயிகள், பொதுமக்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல முடியாது என்று மத்திய அரசு அடாவடியாக மறுத்து வருகிறது.

     சமூக நீதிக்கு சவக்குழி

    சமூக நீதிக்கு சவக்குழி

    தென்மாவட்டங்களின் நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு அணைக்கு கேடு விளைவிக்கும் வகையிலும், தேனி மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் வகையிலும், அணுக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுவதற்கும் அம்பரப்பர் மலையில் "நியூட்ரினோ ஆய்வகம்" என்ற பெயரில் நாசகார திட்டத்தை செயற்படுத்த மோடி அரசு தீவிரமாக இருக்கிறது. தூத்துக்குடி மக்களின் வாழ்வை சூறையாடிய ஸ்டெர்லைட் நச்சு ஆலை விரிவாக்கத்திற்கு மோடி அரசின் அறிவுறுத்தலின்படி அ.தி.மு.க. அரசு அனுமதி வழங்கியுள்ளது.
    மருத்துவப் படிப்புக்கு ‘நீட்' நுழைவுத் தேர்வை திணித்து, சமூக நீதிக்கு சவக்குழி தோண்டிய மோடி அரசை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

     ஜனநாயகத்திற்கு பேராபத்து

    ஜனநாயகத்திற்கு பேராபத்து

    மாநில உரிமைகளை காலில் போட்டு நசுக்கி வரும் மோடி அரசு, தமிழ்நாட்டில் ஆளுநர் மூலம் அரசு நிர்வாகத்தை ஆட்டிப் படைப்பதை ஜனநாயக சக்திகளால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. நாட்டின் பன்முகத்தன் மையை சீரழிக்கும் வகையில் இந்துத்துவா மதவெறி கும்பல் கொட்டம் அடிப்பதற்கும், சிறுபான்மை இஸ்லாமியர், கிருத்துவ மக்கள் மீதும், ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் மீதும் வன்முறைத் தாக்குதல்கள் நடத்துவதற்கும் மோடி அரசின் பின்புல ஆதரவுதான் காரணம் ஆகும். பத்திரிகை, ஊடகங்களை மிரட்டுவதும், கருத்து உரிமைக்கு எதிராக செயல்பட்டு, அரசியல் சட்டத்தையே காலில் போட்டு மிதிப்பதும் ஜனநாயகத்திற்கு பேராபத்தாகும்.

     கருப்புக்கொடி போராட்டம்

    கருப்புக்கொடி போராட்டம்

    பாசிசப் போக்குடன் தமிழ்நாட்டிற்கு எதிராக வஞ்சகம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 12ம் தேதி தமிழகம் வரும்போது, ஒட்டுமொத்த தமிழகமே அணி திரண்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
    ஏப்ரல் 12 அன்று தமிழகம் வரும்போது, பிரதமர் மோடி கருப்புக்கொடி கடலைக் கண்டார் என்று உலகம் அறியும் வகையில் கருப்புக்கொடி போராட்டம் அமைய வேண்டும்.

     மோடிக்கு உணர்த்த வேண்டும்

    மோடிக்கு உணர்த்த வேண்டும்

    தமிழர் இல்லம் தோறும் கருப்புக்கொடிகள் பறக்கட்டும். அலுவலகங்களில் பணிபுரிவோர், ஆலைத் தொழிலாளர்கள் கருப்புப் பட்டை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் கருப்புப் பட்டை அணிந்து மோடி அரசுக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையை பாதுகாக்க, காவிரியில் ஈராயிரம் ஆண்டுகால மரபு உரிமையை மீட்க தமிழ்நாடு கிளர்ந்து எழுந்தது என்பதை பிரதமர் நரேந்திர மோடி உணரும் வகையில் கருப்புக்கொடி அறப்போரை வெற்றி அடைய செய்திட வேண்டும் என்று வைகோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+