காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள பெரியபாண்டி படுகொலை... முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன?
தமிழகத்தில் கொலை, கொள்ளையடித்துவிட்டு வெளிமாநிலத்தில் மறைந்துகொள்ளும் குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் போது தனிப்படை போலீசாருடன் உதவிக்கு ஆயுதப்படை காவலர்களையும் அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை
Recommended Video

சென்னை : குற்றவாளிகளை பிடிக்க வெளிமாநிலங்களுக்கு தனிப்படை போலீசாரை அனுப்பும் போது ஆயுதப்படை காவலர்களை துப்பாக்கிகளுடன் அனுப்ப வேண்டும் என்று தமிழக காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மரணச் செய்தி தமிழக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பாக செயல்படும் காவல் ஆய்வாளரை இழந்த வருத்தத்தில் இருக்கும் சக காவலர்கள் இந்த சமயத்தில் காவல்துறை செய்ய வேண்டியது என்ன என்றும் கூறுகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களும் பணி நிமித்தமாக வந்து தங்குகின்றனர். அவர்களில் சிலர் கொலை, கொள்ளை செய்துவிட்டு சொந்த மாநிலங்களுக்கு தப்பிவிடுகின்றனர். அப்படி தப்பிக்கும் குற்றவாளிகளைத் தேடி தனிப்படை போலீசார் பீஹார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்ல நேரிடுகிறது.

பெரியபாண்டி குடும்பத்திற்கு நிவாரணம்
இவ்வாறு தனிப்படை போலீசார் வெளிமாநிலங்களுக்கு செல்லும் போது பல இடர்பாடுகளை சந்திக்க நேரிடுகிறது. இதனால் தமிழக அரசிற்கு காவல்துறையினர் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். ராஜஸ்தானில் கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்த ஆய்வாளர் பெரியபாண்டியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

ஓய்வு பெறும் வயது வரை முழு சம்பளம்
பெரியபாண்டி பணி ஓய்வு பெறும் வயது வரை அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு முழு சம்பளம் தரவேண்டும். அவரது மனைவிக்கு உடனடியாக குரூம்-2 நிலையில் அரசு வேலை வழங்க வேண்டும். படுகாயம் அடைந்த ஆய்வாளர் முனிசேகருக்கு உரிய உயர் சிகிச்சை அரசு செலவில் தரப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

என்ன செய்ய வேண்டும்?
இனிவரும் காலங்களில் வெளிமாநிலங்களுக்கு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசாரை அனுப்பும் போது சிறப்பு பயிற்சி எடுத்த ஆயுதப்படை காவலர்களை துப்பாக்கிகளுடன் பணிக்கு அனுப்ப வேண்டும். குறைந்தது ஒரு உதவி ஆணையர் தலைமையில் தான் அனுப்ப வேண்டும்.

தனிப்பிரிவு வேண்டும்
உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் சுட்டுப்பிடிக்க எந்த தடையும் இருக்கக்கூடாது.வெளிமாநில கொள்ளையர்களை கண்காணிக்கவும், கண்டுபிடிக்கவும் தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டும் அதில் பன்மொழி பேசக்கூடிய காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் அவர்களுக்கு பல்வேறு மாநில கள நிலவரங்கள் சூழ்நிலைகளை அறிந்து கொள்ளவும் பல மாநில தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் சிறப்பான வழிவகைகளை உருவாக்கித் தரப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications