பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி
சென்னை: இந்தியாவில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனப் பலரும் புகாரளித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்தக் கூடுதல் 10 ரூபாய் பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் முழுமையாக முடிவு காணப்படும் என்று மது விலக்கு அமைச்சர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையைத் தாண்டி, ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படும் விவகாரம் நீண்ட காலமாகவே பிரச்சினையாக இருந்து வருகிறது. மது குடிப்பது மோசமான விஷயம் என்றாலும் கூட டாஸ்மாக்கில் இதுபோல கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதைப் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

டாஸ்மாக் சிக்கல்
தமிழ்நாடு முதல்வர் விஜய்யும் இந்த விவகாரத்தைத் தனது பிரச்சாரத்திலேயே பேசியிருந்தார். குறிப்பாகப் பாட்டிலுக்கு 10 ரூபாய் எனப் பாட்டே பாடியிருந்தார். இருப்பினும், தவெக ஆட்சி அமைந்த பிறகும் கூட இந்தக் கூடுதல் பணம் வசூலிக்கப்படுவது தொடர்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது.
கூடுதலாக ரூ.10
அதேநேரம் டாஸ்மாக் கடையில் இதர பல செலவுகள் இருப்பதாலேயே இந்தக் கூடுதல் 10 ரூபாயை வாங்குவதாக டாஸ்மாக் ஊழியர்கள் விளக்கமளித்தனர். இருப்பினும், இது MRPஐ தாண்டி இருப்பதால் அந்தப் பணம் யாருக்குச் செல்கிறது என்பதில் குழப்பம் இருந்தது. இது தொடர்பாக மது விலக்கு துறை அமைச்சர் விக்னேஷிடமும் கேள்வி எழுப்பப்பட்டது. விரைவில் இந்தப் பிரச்சினை முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்றே அமைச்சர் கூறியிருந்தார்.
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விக்னேஷ், இன்று அந்த மாவட்டத்திற்குச் சென்று பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். அப்போது அங்கும் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாகவும் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மிக விரைவில் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு கொண்டு வரப்படும் என்றார்.
மிக விரைவில்
இது தொடர்பாக அவர் மேலும், "டாஸ்மாக் கடைகளில் ரூ.10 வாங்குவதைத் தடுத்து நிறுத்துவோம். சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் முன்பே அதைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கை எடுப்போம். எல்லாமே MRPக்குள் கொண்டு வரப்படும். எந்தவொரு தனிநபர் அல்லது தனிக்கட்சிக்கும் மக்கள் பணம் சென்று சேரக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். இதற்கான முடிவாகவே மொத்த விஷயங்களையும் MRPக்குள் கொண்டு வருவோம்.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று தான் வந்துள்ளேன். இப்போது தான் பிரச்சினைகளைக் கேட்டுத் தெரிந்து வருகிறேன். அனைவரும் சேர்ந்து வேலை செய்து, இங்குள்ள பிரச்சினைகளைச் சரி செய்வோம். நிச்சயம் இந்த மாவட்டத்திற்கான வளர்ச்சியைக் கொடுப்போம். மற்றவர்களை விமர்சிப்பது எனது நோக்கம் இல்லை. இந்த மாவட்டத்தையும் இங்குள்ள மக்களின் வளர்ச்சியும் மட்டுமே எனது நோக்கம்" என்றார்.
எப்போது
தமிழ்நாட்டில் வரும் 18ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் அதற்குள் டாஸ்மாக் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என அமைச்சர் விக்னேஷ் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications