தர்மபுரி: 15 வயது மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் கைது
தர்மபுரி: தர்மபுரி அருகே பத்தாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியை திருமணம் செய்த அரசுப் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் சின்னம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பாட ஆசிரியராக பணிபுரிந்தவர் ஆறுமுகம் (வயது 37). இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவருடைய மனைவி வேறு ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆறுமுகம், தான் பணிபுரியும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த 15 வயது மாணவியை கடந்த நவம்பர் மாதம், அவரது பாட்டியின் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஆசிரியர் ஆறுமுகம் குறைந்தவயது (மைனர்) பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக போலீசுக்கு புகார் சென்றது. அதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட எஸ்.பி. அஸ்ராகார்க் உத்தரவிட்டார். .
விசாரணையில், மாணவியின் தந்தை இறந்துவிட்டதை அறிந்த ஆசிரியர் ஆறுமுகம், குடும்பத்தாரிடம் ஆசை வார்த்தைகள் கூறி, மாணவியை கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி அன்று 2-வது திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது.
திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பே அந்த மாணவி பள்ளிக்கு செல்வதை நிறுத்தினார். திருமணத்துக்குப் பிறகு பள்ளிக்கு சென்று மாற்றுசான்றிதழை வாங்கிக் கொண்டார். குறைந்த வயது பெண்ணை திருமணம் செய்ததாக ஆசிரியர் ஆறுமுகம் மீது, பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ஆறுமுகத்தை நேற்று போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆசிரியர் ஆறுமுகம் புதுப்பட்டி பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications