தேர்வில் ஆள்மாறாட்டம்: ஹெட்மாஸ்டர் உள்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
சேலம்: சேலத்தில் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த தலைமையாசிரியர் உள்ளிட்ட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியரை ஊக்கப்படுத்த பல்வேறு செயல் திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது.
இதில் ஒரு பகுதியாக மாணவர்கள் கற்றல் முன்னேற்றம் குறித்து கண்டறிய ஆண்டுதோறும் மாநில அளவிலான கற்றல் நிறைவடைவு தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.

ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் தலா 20 பள்ளி வீதம் தேர்வு செய்யப்பட்டு கடந்த மாதத்தில் இத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் சேலம் மாவட்டம் சேலம் ஒன்றியம் சேலத்தாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுத வேண்டிய விடைத்தாளை 6 ஆம் மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றிக்கொடுத்து ஆள்மாறாட்ட மோசடி செய்துள்ளதாக அனைவருக்கும் கல்வி இயக்குனரகத்துக்கு புகார் சென்றுள்ளது.
இதனடிப்படையில் அனைவருக்கும் கல்வி இயக்கக முதன்மை கல்வி அலுவலர் உஷா இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இதில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது.
இதன் தொடர் நடவடிக்கையாக அப்பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் இரவி, இடைநிலை ஆசிரியர் சுரேஷ்பாபு, இடைநிலை ஆசிரியை உமாமகேஸ்வரி ஆகிய மூவரையும் சஸ்பெண்ட் செய்து சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications