பிள்ளை வரம் தரும் ரத்தினவேல் முருகன்- ஆணி செருப்பில் நின்று எலுமிச்சை ஏலம் விட்ட நாட்டாமை
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு விழுப்புரம் அருகே ரத்தினவேல் முருகன் கோவிலில் ஆணி செருப்பில் நின்று எலுமிச்சை ஏலம் விடப்பட்டது.
விழுப்புரம்: பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள ரத்தினவேல் முருகன் கோவிலில் எலுமிச்சம் பழம் ஏலம் நடைபெற்றது. இது பிள்ளை வரம் தரும் கனி என்பதால் ஆணி செருப்பில் நின்று நாட்டாமை எலுமிச்சம் பழத்தை ஏலம் விட்டார். மொத்தம் 9 பழங்களை 68,100 ரூபாய்க்கு பொதுமக்கள் சிலர் ஏலம் எடுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் இட்டை குன்றின் மீது பழமை வாய்ந்த ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது. இங்கு கருவறையில் வேல் மட்டுமே காணப்படுகிறது.
ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் 9 நாள் திருவிழா நடத்தப்பட்டு 10ம் நாள் காவடி பூஜையை தொடர்ந்து 11ம் நாள் நள்ளிரவில் இடும்பன் பூஜையில் எலுமிச்சம் பழம் ஏலம் விடப்படுகிறது.

ஆணி செருப்பில் நாட்டாமை
பங்குனி உத்திர விழா 31.03.2017ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி வீதியுலாவும், 06.04.2017 அன்று திருக்கல்யாணம், 08.04.2017 அன்று தேரோட்டம், 09.04.2017 ம் தேதி காவடி பூஜை நடத்தப்பட்டு 11ம் நாளான 10.04.2017 நள்ளிரவு 11.30 மணிக்கு 1ம் நாள் முதல் 9 ம் நாள் வரை தினமும் நடக்கும் திருவிழாவில் கருவறையில் உள்ள வேலில் குத்தப்பட்ட 9 எலுமிச்சை பழங்கள் வரிசையாக ஏலம் விடப்பட்டது. ஆணி தைத்த மர செருப்பின் மீது நின்று நாட்டாமை பாலகிருஷ்ணன் ஏலத்தை நடத்தினார்.

எலுமிச்சை ஏலம்
முதல் பழம் ரூ.27 ஆயிரம், 2, 3 வது பழங்கள் தலா 6 ஆயிரம் ரூபாய்க்கும், 4 வது பழம் 5ஆயிரத்து 800 ரூபாய்க்கும், 5 வது பழம் 6 ஆயிரத்து 300 , 6 வது பழம் 5 ஆயிரம், 7 வது பழம் 5 ஆயிரத்து 600, 8 வது பழம் 3 ஆயிரத்து 700, 9 வது பழம் 2 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் மொத்தம் 9 பழங்களும் 68 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் போனது.
இந்த பழங்களை குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் ஈரத்துணியுடன் பயபக்தியுடன் பழத்தை வாங்கிச்சென்றனர்.

பிள்ளை வரம் தரும் பழம்
ஏலம் கேட்கும் உரிமை உள்ளூர்காரர்களுக்கு மட்டுமே உள்ளதால் அவர்களை உடன் வைத்துக்கொண்டு ஏலம் கேட்டனர். ஏலம் எடுத்த தம்பதியருக்கு எலுமிச்சை பழத்துடன் ஒரு உருண்டை கருவாடு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. சாதத்தை இருவரும் அங்கேயே பங்கிட்டு சாப்பிட்டனர்.

எலுமிச்சை பிரசாதம்
பழத்தை வீட்டிற்கு எடுத்து சென்று மறுநாள் மதியம் படையலிட்டு பழத்தின் கொட்டையுடன் அதை மனைவி சாப்பிடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு பக்தியுடன் கடந்த ஆண்டு பழத்தை வாங்கி சாப்பிட்ட பலர் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கருவாட்டு சாதம் பிரசாதம்
நள்ளிரவில் நடந்த எலுமிச்சை பழம் ஏலத்தை காண ஏராளமான வெளியூர், உள்ளூர் பெண்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இறுதியில் இடும்பனுக்கு படையலிட்ட கருவாட்டு சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications