தென்காசியில் துடிதுடித்து பறிபோன 7 உயிர்கள்.. அதி வேகமாக பேருந்துகள் சென்றதால் விபத்தா? என்ன நடந்தது?
தென்காசி: தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலியாகினர். பெண்கள், குழந்தைகள் என 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்துகள் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என சொல்லப்படும் நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் கூறிய தகவல்களை காணலாம்.
தமிழகத்தில் கேரள எல்லையோர மாவட்டங்களில் ஒன்று தென்காசி. இயற்கை வளம் நிறைந்த தென்காசியில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களும் உள்ளன. இதனால், தென்காசிக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் மட்டும் இன்றி வெளியூர்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்வதை பார்க்க முடிகிறது.

நேருக்கு நேர் மோதிய பஸ்கள்
எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதும் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லையில் இருந்து தென்காசிக்கு ஒன் டூ ஒன் மற்றும் ரூட் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, தென்காசியில் இருந்து கடையநல்லூர், கோவில்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தனியார் பேருந்துகளும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
7 பேர் பலி, 30 பேர் காயம்
எதிர்பாராத இந்த விபத்தால் பயணிகள் அலறினர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கர விபத்தால் பேருந்து இடிபாடுகளுக்குள் சிக்கி 6 பேர் பலியாகினர். மேலும் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களில் 5 க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணியில் தீ அணைப்பு வீரர்களும் போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி சென்ற கேய்சர் என்ற தனியார் பேருந்து டிரைவர் பொறுப்பற்ற முறையில் வாகனத்தை இயக்கியதாக முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
அதிவேகமாக இயக்கியதாலேயே
அதிவேகம் மற்றும் போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்கவிட்டு தனியார் பேருந்து டிரைவர் பேருந்தை இயக்கியதே விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது" என்றார். விபத்து நடைபெற்ற இடம் குறுகலான சாலை என்பதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய பேருந்துகளை அப்புறப்படுத்தும் பணியில், மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் வேண்டுகோள்
தென்காசி மற்றும் ஆலங்குளம் பகுதியில் தனியார் பேருந்துகளை அதிவேகத்தில், பொறுப்பற்ற முறையில் இயக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசாரோ, இதனை பெரிதாக கண்டுகொள்வது இல்லை எனவும், இருசக்கர வாகன ஓட்டிகள் விதிகள் மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கும் போலீசார், அதேபோல பேருந்துகள் விதிகளை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும் என்று அப்பகுதி மக்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications