சசிகலா பதவியேற்பு.. சென்னை பல்கலை நூற்றாண்டு விழா அரங்கில் ஏற்பாடுகள் தீவிரம்.. அமைச்சர்கள் ஆய்வு
முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ளதை அடுத்து அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி உள்ளிட்டோர் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடத்தில் ஆய்வு நடத்தினர்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நாளை அல்லது நாளை மறுதினம் முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்பு விழா சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் இன்று பார்வையிட்டனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து முதல்வர் பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே சசிகலா முதல்வராக பல்வேறு கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களுக்கு சம்பந்தமே இல்லாத சசிகலா முதல்வராக கூடாது என்று அதிமுகவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

அதிமுக மூத்த தலைவர்கள் பி.எச்.பாண்டியன். கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க வேண்டும் என பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் அவர் முதலமைச்சராக பதவியேற்கும் விழாவை சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதனிடையே தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது.
இதனால் இன்று பதவியேற்பு நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் திடீரென தள்ளிப்போனது. ஆனால் சசிகலா எப்போது பதவி ஏற்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வர உள்ளார். இதையடுத்து நாளை அல்லது நாளை மறுதினம் சசிகலா முதல்வராக பதவியேற்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிடத்தில் அமைச்சர்கள் இன்று ஆய்வு நடத்தினர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ளதை அடுத்து அமைச்சர்கள் ஆய்வு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications