வன்முறை வெறியாட்டம்.. சூறையாடப்பட்ட பள்ளி.. பலியான மாணவியின் பெற்றோருக்கு நெஞ்சு வலி!
கள்ளக்குறிச்சி : சின்ன சேலம் அருகே உயிரிழந்த பள்ளி மாணவியின் பெற்றோருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளி ஒன்றில் படித்த மாணவி கடந்த 13ஆம் தேதி 3வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
மாணவியின் மரணம் தொடர்பாக உறவினர்கள் சந்தேகம் கிளப்பிய நிலையில், இன்று பள்ளி முன்பு நடைபெற்ற போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது.

மாணவி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகில் உள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி கடந்த 13ஆம் தேதி 3வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். அந்த மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரும், உறவினர்களும் குற்றம்சாட்டினர். மேலும் மாணவியின் மரணம் குறித்து விசாரித்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.

வன்முறை வெடிப்பு
இந்நிலையில், இன்று சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையாக மாறி, போலீசார் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் வாகனத்தையும் கல் வீசித் தீ வைத்துக் கொளுத்தினர். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

சூறையாடிய போராட்டக்காரர்கள்
ஆனாலும், தொடர்ந்து, பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி சூறையாடினர்.பள்ளி மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளுக்கும், பள்ளிக்கு சொந்தமான டிராக்டர், புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைத்தனர். பள்ளி அறைகள் மற்றும் சமையல் கூடத்திலும் தீ வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

தீவைத்து எரிப்பு
அங்கு வந்த தீயணைப்பு வாகனத்தையும் போராட்டக்காரர்கள் அச்சுறுத்தி திருப்பி அனுப்பினர். போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட பேருந்துகள் முழுமையாக எரிந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. பள்ளி வளாகம் முழுவதும் புகை மண்டலமும் சாம்பல் நிரம்பி உள்ளது.

கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார்
காவல்துறையினர் அங்குள்ள நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் திணறினர்.போராட்டம் நடைபெற்ற இடத்தில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டகாரர்களை போலீசார், துரத்தி அடித்தனர். இதனையடுத்து வன்முறை கட்டுக்குள் வந்து அப்பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது.
Recommended Video

பெற்றோருக்கு நெஞ்சுவலி
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி சின்ன சேலத்தில் உயிரிழந்த பள்ளி மாணவியின் பெற்றோருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியின் தந்தை ராமலிங்கம் - தாய் செல்வி ஆகியோருக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications