சுவாதி கொலை... ராகுல் குறித்து அவதூறு பரப்பியதாக ஒய்.ஜி.மகேந்திரன் மீது போலீசில் காங். புகார்
சென்னை: சுவாதி கொலை தொடர்பாக பேஸ்புக்கில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறித்து அவதூறு பரப்பிய நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனைக் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாட்ஷா சென்னைக் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
கடந்தமாதம் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் இன்போசிஸ் ஊழியரான சுவாதி. ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாத காரணத்தால் கொலையாளி குறித்த துப்பு கிடைப்பதில் போலீசாருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிலர், சுவாதி கொலையாளி இவர் தான் என சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பினர். அப்படியான ஒரு பதிவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனும் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் அந்தப் பதிவை நீக்கிய ஒய்.ஜி.மகேந்திரன், அது தனது சொந்தக் கருத்தல்ல என விளக்கமும் அளித்தார்.
இதற்கிடையே போலீசாரின் தீவிர விசாரணையில் சுவாதிக் கொலையாளி ராம்குமாரை நெல்லை அருகே போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், உண்மைக்குப் புறம்பாக சுவாதி கொலை வழக்கில் அவதூறு பரப்பியதாக ஒய்.ஜி.மகேந்திரன் மீது காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாட்ஷா சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தது யார் என்று தெரிவதற்கு முன்பே பல விதமான கருத்துக்கள் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் இருந்தன. நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனும் இந்த கொலை தொடர்பாக ஒரு கருத்தை தனது பேஸ்புக் பதிவில் வெளியிட்டார்.
அதில், சிறுபான்மை மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டார். பின்னர், தனது கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதேபோல ராகுல்காந்தி மீது தேவையில்லாமல் குற்றச்சாட்டை கூறி பின்னர் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது தவறுக்கு தொடர்ந்து மன்னிப்பு கேட்டாலும், ஒய்.ஜி.மகேந்திரன் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவரை கைது செய்ய வேண்டும். அவ்வாறு போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் வீடு மற்றும் அவர் நாடகம் நடத்தும் நாடக சபா முன்பும் முற்றுகை போராட்டம் நடத்துவோம்" என்றார்.
இந்தப் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
