தமிழகத்தின் நிதி பற்றாக்குறைக்கு ஜெயலலிதா பொறுப்பேற்க வேண்டும்: விஜயகாந்த்
சென்னை: தமிழகத்தின் நிதி பற்றாக்குறைக்கு முழுக்க முழுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தானே பொறுப்பேற்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
''நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறதா தமிழக அரசு?என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது. அதில் 2015-2016 நிதியாண்டில் வணிக வரித்துறையில் மட்டும் 14 ஆயிரம் கோடி ரூபாயும், பத்திர பதிவு துறையில் மட்டும் 8 ஆயிரம் கோடி ரூபாயுமென, சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் மாநில அரசின் சொந்த வரி வருவாயில் பற்றாக்குறை ஏற்படுமென கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை பார்க்கும்போது அதிமுக அரசு பதவியை விட்டுச் செல்லும்போது தமிழக அரசு கஜானாவையே காலி செய்துவிட்டு செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இதிலிருந்தே தமிழக முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்றதிலிருந்து தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதும், மக்களிடம் நடத்தும் கபட நாடகமும் தெரிகிறது.
2013 - 2014 நிதியாண்டில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாயும், 2014 - 2015 நிதியாண்டில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயும் மாநில அரசின் சொந்த வரி வருவாயில் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது அதுகுறித்து சட்டமன்றத்தில் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, அரசு நிர்வாகத்தில் இது ஒன்றும் பெரிதல்ல என பதிலளிக்கப்பட்டது. ஆனால் தற்போது சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படப்போகிறது என தெரியவந்துள்ளதே இதற்கு, இந்த நிதி நிர்வாக சீர்கேட்டிற்கு, முழுக்க முழுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தானே பொறுப்பேற்க வேண்டும்.
ஒரு சில தனியார் நிறுவனங்கள், தங்கள் நிறுவனம் லாபத்தில் இயங்குவது போன்று இரட்டை கணக்குகளை தயார் செய்து, அதன்மூலம் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்யும் செய்திகளை அடிக்கடி நாம் பார்த்து வருகிறோம். அதுபோலத்தான் அதிமுக அரசும் தனது வரிவருவாய் மதிப்பீட்டை ஒவ்வொரு ஆண்டும் செயற்கையாக உயர்த்திக் காட்டி, மோசடி செய்துள்ளதோ, என்கின்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இப்படியெல்லாம் மாநில அரசின் வரிவருவாயை உயர்த்திக்காட்டி, அதிமுக அரசு பதவி ஏற்ற பிறகு 2011-12ல் 17,261 கோடி, 2012-13ல் 18,387.47 கோடி, 2013-14ல் 21,142.47 கோடி, 2014-15ல் 25,000.22 கோடி, 2015-16ல் 30,446.68 கோடி ரூபாய் என மொத்தம் 2,11,483 கோடி ரூபாய் அளவிற்கு தமிழக அரசின் பொதுக்கடன் பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கு வட்டியாக மட்டும் 17,856.65 கோடி ரூபாய் செலுத்தப்படுவதாகவும், அதிமுக அரசு அளித்த நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் தமிழக பொதுத்துறை நிறுவனங்களின் கடன் சுமார் 2.5 லட்சம் கோடி, இருக்குமென பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளார்கள். ஆக மொத்தத்தில் 4.5 கோடி ரூபாய் கடனில் தமிழகம் சிக்கித் தவிக்கிறது.
ஆனால் 2011ல் தமிழகத்தின் கடன்தொகை 1,01,349 கோடி ரூபாயாக இருந்தபோது, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கின்ற தலைகுனிவிலிருந்து மீட்டு, ஒவ்வொரு தமிழரும் தலை நிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும் வழிவகை செய்வேன் என்று தமிழக மக்களிடம் வாய்ப்பந்தல் போட்ட ஜெயலலிதா, தமிழக முதல்வரான பின்பு ஏற்கனவே இருந்த கடனை அடைக்காமல் விட்டதோடு, தமிழக மக்களுக்கு மேலும் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை மக்கள் தலைமீது சுமத்தியுள்ளார்.
இதற்காகவா தமிழக மக்கள் இவரை முதல்வராக்கினார்கள்? இவ்வளவையும் செய்துவிட்டு, ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் அதிக அளவில் கடன் வாங்குவது அதிமுக அரசின் உரிமை என நியாயப்படுத்தும் ஜெயலலிதாவின் இரட்டை வேடம் தற்போது கலைந்துபோய்விட்டது. ஆட்சியில் இல்லாத போது கடன் வாங்குவது தலைகுனிவு என்றும், ஆட்சிக்கு வந்தவுடன் கடன் வாங்குவது உரிமை என்றும் பேசும் ஜெயலலிதாவுக்கு, அண்ணா ஆரியமாயை என்ற புத்தகத்தில் எழுதிய "இரட்டை நாக்குடையாய் போற்றி" என்ற வரிகள்தான் இவருக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.
எனவே இவர்களை புறந்தள்ளி, தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களை எதிர்காலத்தில் ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications