தென்காசியே திணறிடுச்சு.. ஆலங்குளத்துல "ரம்" இறக்கி விடுங்கய்யா, பிராந்தி வேணாம்.. கோட்டைக்கு கோரிக்கை
தென்காசி: தமிழக அரசுக்கு நூதன வேண்டுகோள் ஒன்று தென்காசி ஆலங்குளத்தில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது.. வேண்டுகோளை விடுத்தது யார் என்பதைவிட, அந்த வேண்டுகோள் என்ன என்பதுதான், மிகப்பெரிய ஆச்சரியத்தை தந்து வருகிறது.
டாஸ்மாக் விவகாரங்களில் அடிக்கடி அடிபடும் மாவட்டங்களில் தென்காசியும் ஒன்று.. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, அருணாசலபுரம் கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த கடைபொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இருந்தது.. எனவே, அமைதியான முறையில் பொதுமக்களும் மதுபானம் வாங்கி சென்றார்கள்.

அருணாசலபுரம்: இதனிடையே, இந்த கடை திடீரென மூடப்பட்டுவிட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே, அருணாசலபுரம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்து, சேர்ந்தமரத்துக்கு சென்று மதுபானம் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.. இதனால் தங்களுக்கு கால விரயம், பண விரயம் ஏற்படுவதாக கூறி, மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கலெக்டரிடமே மனு தந்தார்கள்.
டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆங்காங்கே பொதுமக்கள் மனுக்கள் அளித்து வரும் நிலையில், மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக்கோரி பெண்கள் உட்பட ஏராளமானோர் திரண்டு மனு தந்திருந்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இதுபோலவே, வீரகேரளம்புதூர் அருகே உள்ள பறங்குன்றாபுரம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில், மது பிரியர் ஒருவர் பீர் வாங்க போயிருக்கிறார்.. ஆனால், அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் ரூபாய் 10 அதிகம் கேட்டார்களாம்.
கூலிங் பீர்: இதுகுறித்து டாஸ்மாக் ஊழியரிடம் மது பிரியர் காரணம் கேட்டதற்கு, கடைக்கு கரண்ட் பில் எல்லாம் கட்ட வேண்டியிருக்கு, அதனால், கூலிங் பீர் வாங்க கூடுதலாக 10 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கறாராக கூறியிருக்கிறார். இந்த வாக்குவாதத்தையும் வீடியோவாக அந்த மதுப்பிரியர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இப்போது, இதைவிட உச்சக்கட்டமாக இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. இவரும் ஒரு மதுப்பிரியர்.. ஆலங்குளத்தை சேர்ந்தவர்.. இவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அந்த வீடியோவை தமிழக அரசுக்கே வெளியிட்டுள்ளார்.
அதில், அரசாங்கத்துக்கு சின்ன வேண்டுகோளுங்க.. ரம்மே கிடைக்க மாட்டுங்குது.. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்துல இருக்குற எந்த ஒயின்ஷாப்புலேயும் ரம் கிடைக்கறதில்லை.. பிராந்தி தான் வெச்சிருக்காங்க..
ஒயின்ஷாப்: இந்த பிராந்தியை வாங்கி குடிச்சாலும், ரம்மு அடிச்ச மாதிரி இருக்கிறதுல்லலே.. நாங்க உடம்பு வலியாய், வேலை பாத்துட்டு ஒயின்ஷாப்புக்கு போனால், அங்கே ரம்மு இல்லைன்னு ஒத்த வார்த்தையில சொல்லிடுறாங்க.. நாங்க என்ன பண்ணட்டும்? எங்க நெலமை இப்படித்தான் இருக்கு.
அரசாங்கம் எங்களுக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்கய்யா.. ஆலங்குளத்துல 2 ஒயிஷ் ஷாப் இருக்கு. அந்த 2 ஒயின் ஷாப்புகள்லேயும் ரம்மை கொஞ்சம் அதிகமா இறக்கி விடுங்க.. நாங்க இங்கே எல்லாரும் ரம்முதான் குடிப்போம். முழுநேரமாக குடிச்சிட்டு விழுந்து கிடக்குறவன்தான், பிராந்தியை குடிப்பான். உடம்பு வலிக்க உழைக்கிறவங்க நாங்களெல்லாம் எங்கே போறது? எங்களுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணிட்டு போங்கய்யா" என்று அழாத குறையாக கோரிக்கை வைத்திருக்கிறார்.
அதிர்ச்சி: டாஸ்மாக்கை இழுத்து மூட சொல்லியும், மதுவிலக்கை அமல்படுத்த சொல்லியும், தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுத்துவரும்நிலையில், அந்த தமிழக அரசிடமே, ரம் வேண்டும் என்று மதுப்பிரியர் வீடியோ வெளியிட்டு கேட்டிருப்பது, அதிர்ச்சியை தந்து வருகிறது..!!












Click it and Unblock the Notifications