தமிழகத்தில் பரவலாக மழை.. உள்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் வார்னிங்
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை நிறைவடைந்த நிலையில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேர நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கனமழை
இதன் காரணமாக உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சி வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மாலையில் மழை
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குன்னூரில் 7 செமீ
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 7 செ.மீ., பரமக்குடி, இரணியல், விளாத்திகுளம் பகுதிகளில் தலா 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் கனமழை
இதனிடையே திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஏந்தல், வேங்கிக்கால், அடி அண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்று வட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி
நெல்லை மாவட்டம் வள்ளியூர் ,திசையன்விளை , இட்டமொழி , மூலைக்கரைப்பட்டி பகுதிகளில் இடி , மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெப்பம் தணிந்தது
திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகை, கரூர், மதுரை, அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications