கேரள வெள்ளம்... இடுக்கி மாவட்ட நிலவரம் என்ன.. தமிழர்கள் பத்திரமாக உள்ளனரா?
இடுக்கி தேவிகுளத்தில் தமிழர்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தகவல்தேவிகுளத்தில் உயிர்சேதம் எதுவும் நடைபெறவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
Recommended Video

சென்னை: இடுக்கி மாவட்டம் தேவிகுளத்தில் வாழும் தமிழர்களுக்கு எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கையின் கோர முகம் இன்னும் கேரளாவை நோக்கியே உள்ளது. அதிலும் குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில்தான் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை கொள்ளளவு விவகாரத்தில் 142 அடி, 139 அடி என்று இரு மாநிலமும் முட்டிக் கொண்டு கிடக்கிறது. இந்த விவகாரம் இதுவரை ஒரு முடிவுக்கு வந்த மாதிரியும் தெரியவில்லை.
இதனிடையே தற்போது, "எங்கள் அணை உடைய போகிறது, இடுக்கி மாவட்டமே அழிய போகிறது" என்று விஷ தகவல்களும் வேகமாக பரவி வருகிறது. கூடவே இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் பகுதியிலும் உயிர்சேதம், வெள்ள சேதம் என தகவல்களும் வந்தன. இது தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.

கூடலூரா? தேவிகுளமா?
காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, கேரள-தமிழக எல்லை பிரிவினையில் தமிழகத்துக்கு தேவிகுளம் வேண்டுமா? கூடலூர் வேண்டுமா என ஒரு குழப்பம் நிலவியது. அப்போது காமராஜர்தான், நீலகிரி சிறிய இடமாக உள்ளது. அதனால் அதனுடன் தேயிலை தோட்டங்கள் நிறைந்த கூடலூரை தமிழகத்தில் இணைத்து கொள்ளலாம் என்றார். அதன்பின்னர் இந்த தேவிகுளம் கேரளா இடுக்கி பகுதிக்கு வழங்கப்பட்டு விட்டது. என்றாலும் தேவிகுளத்தில் அதிக தமிழர்கள் தற்போது வசித்து வருகிறார்கள். நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள்தான் இந்த பகுதியில் அதிகம் உள்ளனர்.

ஏஐடியுசி தலைவர் பிரத்தியே பேட்டி
இடுக்கி வெள்ள பாதிப்பில் தேவிகுளத்தில் அதிக தமிழர்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், சில உயிர்ச்சேதமும் ஏற்பட்டதாகவும் தகவல்கள் சமூகவலைதளங்களில் விரைந்து பறந்து வருகின்றன. பொதுவாக, நல்ல செய்திகளை விட கெட்ட செய்திகள்தானே அதிக வீரியத்துடன் பரவும். கசிகின்ற தகவல்கள் எல்லாம் உண்மைதானா? நம் ஆட்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா? உண்மையில் அங்கு எல்லாரும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்களா என்று "ஒன் இந்தியா" முயற்சி மேற்கொண்டது. அதன்படி, ஏஐடியுசி இடுக்கி மாவட்ட தலைவர் சோமன் என்பவரிடம் இதுபற்றி நேரிடையாகவே கேட்டோம்.

உயிர்சேதம் இல்லை
தேவிகுளம் நிலவரம் பற்றி இவ்வாறு சொல்கிறார்: "தேவிகுளத்திலோ இடுக்கி பகுதியிலோ உயிர்சேதம் போன்ற சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. இங்கு உண்மையான நிலவரம் என்னவென்றால், இடுக்கி வெள்ளம் காரணமாக, எந்த வெளி இடங்களுக்கும், வெளியூர்களுக்கும் போக முடியாத சூழ்நிலைதான் நிலவி வருகிறதே தவிர பெரிய பாதிப்பு இல்லை. பெய்தது என்னவோ பெரிய மழைதான். வெள்ள சேதமும் அதிகம்தான்.

எல்லாமே வதந்திதான்
இதைதவிர அணையிலும் தண்ணீர் அதிகமாக திறந்துவிடப்பட்டுள்ளது. அதனால் வீடுகளில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கரண்ட் கிடையாது. இணையதளம் துண்டிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல்-டீசல் கிடைப்பதில்லை. இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள்தான் இருக்கிறதே தவிர தேவிகுளத்தை பொறுத்தவரை தமிழ் மக்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. எல்லாமே வதந்திதான். பொய்ப் பிரச்சாரம்தான்." இவ்வாறு சோமன் தேவிகுளத்தின் உண்மை நிலவரம் குறித்து விளக்கம் அளித்து தெளிவுபடுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications