கிருஷ்ணப்பிரியாவை அறைவேன் என்பதா? ஜெ. வை கொச்சைபடுத்தும் நடராஜனை எதனால் அடிப்பது? கேபி முனுசாமி
டி.டி.வி தினகரன், நடராஜன், சசிகலா குறித்து அதிமுகவினருக்கு கவலை இல்லை என்று கே.பி.முனுசாமி தெரிவித்து உள்ளார்.
கிருஷ்ணகிரி : டி.டி.வி. தினகரன், நடராஜன், சசிகலா குறித்து அதிமுகவினருக்கு எந்த கவலையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்து உள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் உள்ள தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடத்தில் டி.டி.வி தினகரன் தனிக்கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், டி.டி.வி. தினகரன், சசிகலா, நடராஜன் குறித்து அதிமுகவினர் யாருக்கும் கவலை இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் நடராஜன் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள திட்டங்களை தான் தான் தயார் செய்து கொடுத்துள்ளேன் என்பது போல் நடராஜன் பேசியுள்ளார். இதற்கான எதிர்வினைகள் கடுமையாக இருக்கும் என்று அவரை எச்சரிப்பதாகவும் கே.பி.முனுசாமி தெரிவித்து உள்ளார்.
மேலும், கிருஷ்ணப்பிரியா குறித்தான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 'கிருஷ்ணபிரியாவின் கன்னத்தில் அறைவேன் என்று நடராஜன் கூறுகிறார். ஒன்றரை கோடி தொண்டர்களின் மனது புண்படும்படி ஜெயலலிதாவை கொச்சைப்படுத்திய நடராஜனை எதனால் அடிப்பது என்று தெரியவில்லை. நடராஜன் ஒரு கிரிமினல் என்று எம்.ஜி.ஆரால் வெளியேற்றப்பட்டவர் ஆவார்' என்று காட்டமாக குறிப்பிட்டார்.
ஆடிட்டர் குருமூர்த்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தை வழி நடத்த ஜெயலலிதா எங்களுக்கு கற்று கொடுத்து உள்ளார். பொருளாதார வளர்ச்சியில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்த இடத்தில் தமிழகம் தான் உள்ளது. இது பொருளாதார மேதை என்று கூறும் ஆடிட்டர் குருமூர்த்திக்கு தெரியாதா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications