திருடப்போன இடத்தில் பர்ஸை மறந்து விட்டு வந்த திருடன் – மாட்டிவிட்ட டிரைவிங் லைசென்ஸ்!
கோவை: கோவையில் திருடப்போன இடத்தில் ஓட்டுநர் உரிமத்தை தொலைத்துவிட்டு அதனால் திருடன் மாட்டிக் கொண்ட சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, செல்வபுரம் பகுதியிலுள்ள சிவாலயா திரையரங்குக்கு அருகில் முகமது யாசூப் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல சனிக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டுச் சென்றார்.
ஞாயிற்றுக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூபாய் 20,000 மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள் மற்றும் சில பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
இதுகுறித்து முகமது யாசூப் செல்வபுரம் போலீஸில் புகார் அளிக்த்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடையில் ஒரு பர்ஸ் கிடந்தது தெரியவந்தது.
அதில் நீலகிரி மாவட்டம், குன்னூரிலுள்ள ராஜாஜி நகரைச் சேர்ந்த இப்ராஹிம் என்ற பெயரில் ஓட்டுநர் உரிமம் இருந்துள்ளது. இதை வைத்து போலீசார் விசாரித்ததில், இப்ராஹிம் செல்வபுரம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து குடியிருப்பது தெரிந்தது.
மேலும் திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, திருட்டு நடைபெற்ற சிறிது நேரத்தில் போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும், கடையில் திருடப்பட்ட சிகரெட் பண்டல்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications