வெள்ளத்திலும் விடாத கள்ளத்தனம்... பூட்டிய வீடுகளில் திருடும் கும்பலால் சென்னை மக்கள் வேதனை
சென்னை: வெள்ளம் சூழ்ந்திருப்பதால் வீடுகளை விட்டு வெளியேறியுள்ள சென்னை மக்களுக்கு மேலும் ஒரு வேதனையாக திருடர்களின் அட்டகாசம் வந்து சேர்ந்துள்ளது. பூட்டிய வீடுகளில் திருடர்கள் புகுந்து சூறையாடி வருவதாக தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
மனிதாபிமான உதவிகளை ஒரு பக்கம் மக்கள் அளித்து வரும் நிலையில் மறுபக்கம், இந்த கஷ்டமான சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாக்கி திருட்டுகளில் ஈடுபட்டு வருவது ஏற்கனவே நொந்து போயுள்ள மக்களுக்கு பெரும் வேதனையைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.
வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பூட்டிய வீடுகளில் திருடியதாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பல பகுதிகளில் பெருமளவில் பொருட்களும், பணமும் திருடு போயுள்ளதாக பொதுமக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்
சென்னையில் கொட்டித் தீர்த்த பேய் மழையால் பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. விருகம்பாக்கம் அதில் ஒன்று. அதேபோல கோட்டூர்புரம், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதில் பல நூறு வீடுகள் மூழ்கிப் போயின.

வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்
வெள்ளம் வெளியில் மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் சூழ்ந்ததால், மக்கள் வீடுகளை விட்டு தற்காலிகமாக வெளியேறினர். சொந்தக்காரர்கள் வீடுகளுக்கும், தெரிந்தவர்கள் வீடுகளுக்கும் இடம் பெயர்ந்தனர்.

திருடர்கள் அட்டகாசம்
இதனால் பல பகுதிகளில் வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. இதைப் பயன்படுத்திக் கொண்டு திருடர்கள் அட்டகாசம் செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. பூட்டிய வீடுகளை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் அங்கிருந்த விலை மதிப்புள்ள பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.

2 பேர் கைது
இப்படி திருடியதாக ரஞ்சித் உள்பட 2 பேரை மாம்பலம் பகுதியில் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் பணம், கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றைத் திருடியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் சூறை
கோட்டூர்புரத்தைச் சேர்ந்த வெங்கட்ராம் என்பவர் வெள்ளம் வடிந்ததால் தனது வீட்டுக்கு குடும்பத்துடன் திரும்பினார். அப்போது, வீடு பூட்டு உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டிருப்தபை பார்த்து அதிர்ந்தார். இருப்பினும் வீட்டை விட்டுச் செல்லும் முன்பு நகை, பணத்தை பத்திரமாக எடுத்து விட்டதால் அவை தப்பின.

பாதுகாப்பே இல்லை
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதால்தான் திருட்டு பிரச்சினை அதிகரித்திருப்பதாக மக்கள் கூறுகின்றனர். எனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில் போலீஸ் ரோந்து அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எங்கெல்லாம் ஆபத்து
கோட்டூர்புரம், அசோக்நகர், தாம்பரம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில்தான் திருட்டுச் சம்பவங்கள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இப்பகுதிகளில் போலீஸார் ரோந்தை அதிகரிக்கவும் கோரிக்கை வலுத்துள்ளது.
இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற திருடர்களை என்ன செய்யலாம்..?












Click it and Unblock the Notifications