Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம்மோட ராசி நல்ல ராசி.. வாழ்க்கையை கொஞ்சம் மாத்தி யோசி!

Subscribe to Oneindia Tamil

நம்மில் பெரும்பாலானோருக்கு ராசி பலன் படிக்கும் பழக்கம் இருக்கிறது. தினமும் ராசி பலன் படிக்காதவர்கள் கூட புத்தாண்டு பலனையாவது ஆர்வத்தில் படித்துவிடுவார்கள். அதற்கு அடுத்தபடியாக சனிப்பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி போன்ற காலங்களில் ராசி பலன்கள் சக்கை போடுபோடுகின்றன. எந்த டிவியை திருப்பினாலும் யாராவது ஒரு ஜோசியர் உட்கார்ந்து பலன் சொல்லிக் கொண்டிருக்கிறார். யூ ட்யூப் சேனல்களிலும் இதேதான் நிலை.

ராசி பலன் நமக்கு சாதகமாக இருந்தால், மனம் மகிழ்ச்சியில் மிதக்கிறது. அதுவே கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க, நேரம் சரியில்லை, தேவையில்லாத பிரச்னைகள் வரும், நாக்கை அடக்குங்க, தேவையில்லாத பிரயாணங்களை தவிருங்கள் என பலன் வந்துவிட்டால் மனசு பாரமாகிவிடுகிறது. என்னடா இது இப்படி போட்டிருக்கு? இந்த வருஷம்தான் நிறைய முக்கியமான விஷயங்களை செய்யலாம்னு முடிவு பண்ணி வெச்சேன்.. செய்யலாமா வேணாமா.. என்று சஞ்சலம் வந்துவிடுகிறது.

think different to make the life beautiful

சரிப்பா, அதுக்கு என்ன பண்றது என்கிறீர்களா? முதலில் இந்த கதையை கேட்டுட்டு வாங்க, அப்புறம் என்ன பண்ணலாம்னு சொல்றேன்.
ஒரு தீவுல உலக குத்துச்சண்டை போட்டி நடந்துச்சாம். இது சாதாரண குத்துச்சண்டை இல்லை, பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி. உலக நாடுகள் எல்லாவற்றிலும் இருந்து நிறைய பூனைகள் இந்த போட்டிக்கு வந்திருந்திச்சாம். பல ரவுண்டுகளா போட்டி விறுவிறுப்பா நடக்குது. ஒட்டுமொத்த ரவுண்டுகளிலும் அமெரிக்க பூனை அடி தூள் கிளப்பிக்கிட்டு இருந்ததாம். அதன் முன் நின்ற எந்த பூனையும் சில நிமிடங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற வல்லரசு பூனைகள் கூட நம்ம அமெரிக்க பூனைவிட்ட வலுவான குத்துக்கு முன் ஒன்றும் செய்ய முடியாமல் சுருண்டுவிழுந்துவிட்டன. எல்லோரையும் அடித்து துவைத்துவிட்டு அமெரிக்க பூனை இறுதி சுற்றுக்கு வந்துவிட்டது.

இறுதி சுற்றில் அதன் முன் வந்து நின்றது சோமாலியா நாட்டின் வத்தலான ஒரு பூனை. அப்போதான் எல்லோரும் அந்த பூனையை கவனித்தார்கள். அடடே, இது எப்படி இத்தனை ரவுண்டு தாண்டி இறுதிச்சுற்றுக்கு வந்திருக்கு, நாம இதை பார்க்காமலே விட்டுட்டோமேன்னு ஆச்சர்யப்பட்டாங்க. அதைவிட பெரிய ஆச்சர்யம் அடுத்த சில நிமிடங்களில் அரங்கேறியது. அமெரிக்க பூனை அந்த சோமாலிய பூனைய அலட்சியமாக பார்த்தபடியே முன்னேறியது. அமைதியாக நின்ற சோமாலிய பூனை அமெரிக்க பூனை பக்கத்தில் வந்ததும் எகிறி ஒரு குத்துவிட்டது. நம்ம கொழு கொழு அமெரிக்க பூனை கொழ கொழ என்று ஆகி, அப்படியே சரிந்துவிட்டது. அப்படியே அரை மயக்கத்திற்கு போன அமெரிக்க பூனையின் அருகில் போய் சோமாலிய பூனை சொல்லிச்சாம், "அடேய் பக்கி, நான் பூனையே இல்லை... நான் புலிடா. எங்க ஊர் பஞ்சத்துல சோத்துக்கு வழியில்லாம இப்படி வத்தலும், தொத்தலுமா ஆயிட்டேன். ஆனாலும் நான் புலிடான்னுச்சாம்"

think different to make the life beautiful

இதுதான் நாம கவனிக்க வேண்டிய மேட்டர். ஆயிரம் சோதனை வந்தாலும் புலி.. புலிதான். அது ஒருநாளும் பூனைகளிடம் தோற்றுப் போகாது.
அதனால நம்ம ராசிக்கு இந்த வருட பலன் எப்படி இருந்தாலும், அதற்காக துவண்டு போய் உட்கார்ந்துவிடாமல், தன்னம்பிக்கையோடு எந்தவொரு செயலையும் செய்யுங்க. தன்னம்பிக்கையோடு உண்மையாக உழைப்பவனை எந்த சக்தியும் கெடுத்துவிட முடியாது என்பதுதான் நம்ம ஆன்மீகப் பெரியோர்கள் முதல் நாத்திகப் பெரியோர்கள் வரை எல்லோரும் சொல்றது.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

இது திருவள்ளுவர் வாக்கு. விதி நமக்கு உதவாவிட்டாலும், ஒருத்தன் செய்யும் முயற்சி அதுக்கான பலனை கண்டிப்பாகத் தரும் என்கிறார் வள்ளுவர்.
கிரகங்களின் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களின் வாழ்வில் மாற்றங்கள் வரும் என்கிறது ஆன்மீகம். அறிவியலும் கிரகங்களின் மாற்றம் மனித மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவது உண்மைதான் என உறுதி செய்திருக்கிறது. இருந்தாலும், இதற்காகவெல்லாம் நாம் கலங்கி உட்கார்ந்துவிட வேண்டியதில்லை. ஏன்னா, நம்ம ஊர் ஜோசியர்களுக்கு இந்த கிரகப் பெயர்ச்சிகளின் பலன்களை எந்தளவுக்கு துல்லியமாக சொல்லத் தெரியும் என்பது நாம யாருக்கும் தெரியாது.

அது மட்டுமில்லாம, பெரிய கிரகங்களான சனி மற்றும் குருவின் பெயர்ச்சிக் காலத்தின்போதுதான் நாம பலன்களை கேட்கிறோம். இதேபோல ராகு பெயர்ச்சி, கேது பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி, செவ்வாய் பெயர்ச்சி என மற்ற கோள்களின் பெயர்ச்சிகளுக்கும் பலன்கள் இருக்கின்றன. இதை எல்லாம் ஒரு ஜோசியர் துல்லியமாக கணக்கில் கொண்டு பலனை சொல்வது என்பது எந்தளவுக்கு சாத்தியம் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.
எனக்கு தெரிந்த ஒரு மாதப் பத்திரிகை ஆசிரியர் இருந்தார். ஒருமுறை அவரைப் பார்க்க அலுவலகத்திற்கு போயிருந்தேன். என்ன பண்றீங்க என்று கேட்டபோது, ராசி பலன் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றார். நீங்க எப்ப சார் ஜோசியர் ஆனீங்க என்று கேட்டேன்.

அதை ஏன் கேக்கறீங்க, வழக்கமா எழுதுற ஜோசியருக்கு மூணு மாசமா பேமண்ட் தரல. அதனால் இந்த மாசம் பலன் அனுப்பாம விட்டுட்டார். ஆனால் பத்திரிகை நாளைக்கு பிரிண்ட்டுக்கு போகணும். அதான் நானே... மனசுப்படி நடக்கும் மகர ராசிக்காரர்களே, விறுவிறுப்பாக இயங்கும் விருச்சிக ராசிக்காரர்களேன்னு ஆரம்பிச்சு ஒரு குத்துமதிப்பா பலன் எழுதிகிட்டிருக்கேன். என் மனைவிக்கு, மச்சினிச்சிக்கு எல்லாம் நல்ல பலனா போட்டுட்டேன். உங்க ராசி என்னென்னு சொல்லுங்க, உங்களுக்கும் சிறப்பா போட்டுருவோம்னு சொன்னார். தனக்கு பேமண்ட் வருமா, வராதான்னே கண்டுபிடிக்க முடியாத ஜோசியர் பலன் எழுதும்போது, நீங்க தாராளமா எழுதலாம் சார், தப்பே இல்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

இப்படித்தான் பல இடங்களில் ராசி பலன் பஞ்சாயத்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. நல்ல ஜோசியராகவே இருந்தாலும், அவர்களே தங்களின் வீடியோவின் முற்பகுதியில் சொல்வது போல, இதெல்லாம் பொதுப்பலன்கள்தான். ஒவ்வொருவரின் ஜாதகத்திற்கு ஏற்பவும் பலன்கள் மாறும். அதிலும் ஜோசியரால் கணித்து சொல்லமுடியாத ஏராளமான நுணுக்கமான விஷயங்கள் இருக்கின்றன. வான் சாஸ்திரம் என்பது அத்தனை சாதாரணமானது அல்ல. ஒரு லேப் டெக்னீஷியன் எக்ஸ்-ரே ரிப்போர்ட்டைப் பார்த்து மார்ச்சளி அதிகமா இருக்கு என்று சாதாரணமா சொல்லிவிடுவதைப் போல ஒருவரின் ஜாதகத்தை பார்த்து நடக்கப் போவதை புட்டுபுட்டு வைத்துவிட முடியாது.

நாளை என்ன நடக்கும் என்பது தெரியாதவரை தான் இந்த வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். எல்லோருக்கும் தங்களின் மரண தேதி தெரிந்துவிட்டால் எப்படி இருக்கும், கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இப்பவே மனிதர்கள் நமக்கு சாவே வராது என்ற ரீதியில் தான் இல்லாத ஆட்டமெல்லாம் ஆடுகிறார்கள். வாழ்வின் நிலையாமை பற்றி பட்டினத்தார் முதல் கண்ணதாசன் வரை எத்தனை பேர் பாடி வைத்தாலும் அது நம் மண்டையில் ஏறுவதே இல்லை.

இன்னும் அடுத்து என்னவெல்லாம் நடக்கும் என்பதை ராசி பலன் மூலம் முழுசா தெரிஞ்சிக்க முடியும் என்றால், நமக்கு என்ன நடக்கும் என்பதைதாண்டி, அடுத்து எந்த கட்சி ஆட்சிக்கு வரும், ஸ்டாக் மார்க்கெட் நிலவரம் என்ன என்பது வரை உலகம் முழுவதும் அல்லோலகல்லோலம் ஆயிடும். அதனால கையில் இருக்கிற வாழ்க்கையை சந்தோஷமா, மனசுக்கு பிடித்தபடி, கொஞ்சம் புத்திசாலித்தனமா வாழ்ந்துவிட்டு போவதுதான் ஒரே பரிகாரம். இந்த பரிகாரம் அனைத்து ராசி அன்பர்களுக்கும் பொருந்தும்.

- கௌதம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+