திமுக அணிக்கு திருமா... ஆம் ஆத்மிக்கு உதயகுமார் அழைப்பு: தி. வேல்முருகன் தகவல்
சென்னை: திமுக அணியில் இணைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து செயல்பட முடியுமா என உதயகுமாரும் கேட்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
நியூஸ் சைரன் வார ஏட்டுக்கு தி. வேல்முருகன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஈழத் தமிழர் பிரச்சனையோ, இங்குள்ள தமிழர் நலனோ இதுவரையில் வைகோ, சீமான், திருமா போன்றவர்கள் களத்தில் இறங்கி போராடி இருக்கிறார்கள். நானும் அவர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்களோடு பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், தமிழ்த் தேசிய பொதுவுடைமை கட்சி பெ. மணியரசன், மே 17 இயக்கம், சேவ் தமிழ், மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழீழ மாணவர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆதரவு இயக்கங்கள் எல்லாமும் ஒரு நோக்கத்திற்காக இணைந்திருந்தோம்.
இவர்களை எல்லாம் ஒரே அணியில் சேர்த்து ஒரு தனி இயக்கமாக தேர்தலில் போட்டியிடுவது என்ற முயற்சியில் இருந்தேன். ஆனால் இன்றைக்கு அண்ணன் வைகோ தலைமையிலான மதிமுக, பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்து அந்த முயற்சியை இல்லை என்றாக்கிவிட்டது.
சீமான் அண்ணனை எடுத்துக் கொண்டால் 2016 சட்டமன்ற தேர்தல் களத்தில் இறங்கினால் போதும் என்றிருக்கிறார்கள். ஆக ஒத்த கருத்தோடு ஒன்றாய் போராட்ட களத்தில் நின்றவர்கள் எல்லாம் நாடாளுமன்ற தேர்தல் என்றவுடன் சிதறிப் போய்விட்டார்கள். வைகோ அண்ணனைப் போன்றவர்கள் கட்சி சார்ந்த நலன் மட்டுமே பிரதானம் என்று போய்விட்டார்கள்.
என்னால் ஈழ உணர்வாளர்களை ஒன்றிணைக்க முடியவில்லை.. முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
திருமாவளவனும் ஜவாஹிருல்லாவும் திமுக கூட்டணிக்கு வருமாறு அழைத்தனர். சீமான் வரும் சட்டமன்ற தேர்தல்வரை நம்மை பலப்படுத்திக் கொண்டு அடுத்த தேர்தலில் களமாடலாம் என்று சொல்லியிருக்கிறார். சுப. உதயகுமார், ஆம் ஆத்மி கட்சியோடு ஒன்றிணைந்து செயல்படலாமா என்று என்னிடம் கேட்டார். அதில் என்னையும் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டார்..நான் இன்னமும் முடிவை சொல்லவில்லை.
இவ்வாறு தி. வேல்முருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications