ஜெயலலிதாவும் குற்றவாளிதான்… எதற்காக தொடர வேண்டும் இந்த ஆட்சி.. திருமாவளவன் கேள்வி
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதாவும் குற்றவாளி என்பதால் எதற்கு தற்போது ஆட்சி தொடர வேண்டும் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என்று தீர்ப்பில் வந்திருக்கும் போது எதற்காக தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் தொடர்புடைய சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 4 பேருமே குற்றவாளிதான் என்று வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை திருமாவளவன் வரவேற்றுள்ளார்.
மேலும், இந்த வழக்கின் தீர்ப்பு குறித்தும், அவருடை கட்சியின் நிலைபாடு குறித்தும் திருமாவளவன் கூறியிருப்பதாவது:

விசிக வரவேற்பு
சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை ஜுன் மாதம் முடிவடைந்தது. இந்திய அளவில் ஊழல்வாதிகள் அச்சப்படும் அளவில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இதனை விசிக வரவேற்கிறது. இந்தத் தீர்ப்பில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதே வேளையில் மறைந்த ஜெயலலிதா காலமாகிவிட்டதால் தண்டனையில்இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

குற்றவாளி ஜெயலலிதா
ஜெயலலிதாவும் இதில் குற்றவாளிதான் என்பதை இந்த தீர்ப்பு உணர்த்துகிறது. கடந்த அதிமுக சட்டசபைத் தேர்தலில் மக்கள் வழங்கிய வாக்குகள் ஜெயலலிதாவிற்காக வழங்கப்பட்ட வாக்குகள். மக்கள் ஜெயலலிதாவிற்கு வழங்கிய வாக்குகளின் அடிப்படையில்தான் இங்கு ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என்று தீர்ப்பு அமைந்திருப்பதால் தற்போதுள்ள ஆட்சி தொடருவதில் எந்த வகையிலும் நியாயம் இல்லை.

ஓபிஎஸ்ஸுக்கு பெரும்பான்மை
தற்போது சசிகலா தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என்று இரண்டு அணிகள் அதிமுகவில் உள்ளன. சசிகலா தண்டனை பெற்றுவிட்ட நிலையில், அவருக்கு ஆதரவு அளித்த பெரும்பாலோர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளிக்க வாய்ப்பிருக்கிறது. என்றாலும் இவர் தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பெறுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.

மீண்டும் பொதுத்தேர்தல்
விடுதலை சிறுத்தைகளை பொறுத்தவரை ஜெயலலிதாவும் குற்றவாளி என்று தீர்ப்பு அமைந்துவிட்டதால், அடுத்து பொதுத் தேர்தலை நோக்கி போவதுதான் நியாயமாக இருக்க முடியும். மீண்டும் தேர்தல் நடத்தி மக்கள் வாக்களிப்பதன் மூலம் புதிய அரசு அமைந்தால் தமிழகத்திற்கு நன்மைகள் ஏற்படும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications