தமிழகத்தில் இன்னொரு புரட்சி வெடிப்பதற்குள் அரசு விழித்துக்கொள்ள வேண்டும்: கெளதமன் ஆவேசம்
தூத்துக்குடி மக்கள் எழுச்சிப் போராட்டம் புரட்சியாக மாறுவதற்குள் அரசு விழித்துக்கொள்ள வேண்டும் என்று கெளதமன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி : தூத்துக்குடி மக்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருவது மாநிலம் முழுவதும் புரட்சியாக வெடிப்பதற்குள் தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் கெளதமன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் நடத்தி வரும் அறவழிப்போராட்டம் இன்றுடன் 100வது நாளை எட்டியுள்ளது. இதனையொட்டி பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்க மக்கள் அனுமதி கேட்ட நிலையில், போலீஸார் அனுமதி மறுத்தனர்.

மேலும், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் இன்று காலை பேரணியைத் துவக்கினர். இவர்களைப் போலீஸார் தடுத்ததால், அங்கு கலவரம் ஏற்பட்டது.
போரட்டக்காரர்கள் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டதால், காவல்துறையினர் அவர்களைத் தடியடி நடத்திக் கலைக்க முயற்சி செய்தனர். இதில் 25க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பொதுமக்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து இயக்குநர் கெளதமன் கூறுகையில், சொந்த மண்ணில் தங்களது சொந்தப் பிரச்னைகளுக்காகப் பொதுமக்கள் கூடியுள்ளனர். 100 நாட்கள் அறவழியில் போராடியும் செவி சாய்க்காததால், அரசுக்கு எதிரான மக்களின் கோபம் அதிகரித்துள்ளது.
தூத்துக்குடியில் உருவான இந்த தன்னெழுச்சிப் போராட்டம் இன்னொரு மெரினா ஜல்லிக்கட்டுப் புரட்சியாக தமிழகம் முழுவதும் வெடிப்பதற்குள் தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும்.
இனியும் மக்களை அதிகாரத்தின் கை கொண்டு அடக்குவது பயன் தராது என்பதை, மக்களின் இந்த கோபத்தில் இருந்து அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications