பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கு போனில் கொலை மிரட்டல்
சேலம்: 13 லட்சம் வாக்காளர்களின் வேட்பாளரான தனக்கு மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், ஆனால் அது தொடர்பாக புகார் அளிக்கப் பட்டும் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார் பாமக முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி.
ஆரணி லொக்சபா தொகுதி பாமக வேட்பாளராக போட்டியிடுகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி. இன்று செஞ்சியில் பா.ம.க. தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் ஏ.கே.மூர்த்தி. அப்போது மர்ம மனிதர் டெலிபோனில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசால் நான் பா.ம.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன். ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் பா.ம.க. நிர்வாகிகளையும், கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் அனைத்து சமுதாய மக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறேன். பொது வேட்பாளராக என்னை ஏற்றுக்கொண்டு மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
நேற்று திருவண்ணாமலை மாவட்டம் பெரமணமல்லூர் அருகே பிரசாரம் செய்து கொண்டிருந்தேன். மாலை 6.28 மணிக்கு எனக்கு செல்போனில் மர்ம மனிதர் ஒருவர் பேசினார். அவர் தகாத வார்த்தையால் திட்டினார். இன்று இரவு உன்னை துக்கிடுவேன்டா, இந்த தொகுதியில் இடைத்தேர்தல்தான் வரப்போகிறது என்று மிரட்டினார். அவரிடம் தைரியம் இருந்தால் நேரில் வந்து பேசு என்று கூறி செல்போன் இணைப்பை துண்டித்து விட்டேன்.
இந்த மிரட்டல் குறித்து என்னுடன் பாதுகாப்புக்கு வந்த இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்தேன். செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு டெலிபோனில் கூறினேன். திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டை தொடர்பு கொண்டு பேச முயன்றேன். அவர் நிகழ்ச்சி ஒன்றில் இருப்பதாக இன்ஸ்பெக்டர் கூறினார்.
மர்ம மனிதன் மிரட்டல் விடுத்தது தொடர்பாக செய்யாறு தேர்தல் அலுவலரிடம் என்னுடைய உதவியாளர் மூலம் எழுத்து பூர்வமாக புகார் அளித்துள்ளேன். இந்த பிரச்சினை தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் யாரும் என்னுடன் தொடர்பு கொண்டு விசாரிக்க வில்லை.
நான் எதற்கும் பயந்தவன் அல்ல. நான் 13 லட்சம் வாக்காளர்களின் வேட்பாளர். எனக்கு எதுவும் நடந்தால் யார் பதில் சொல்வது? இந்த மிரட்டல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படா விட்டால் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்வேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications