பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: 7 அடுக்கு பாதுகாப்பு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதை முன்னிட்டு, விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி நாளை பிற்பகல் 1 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வருகிறார். அப்போது முக்கிய பிரமுகர்கள் அவரை வரவேற்கின்றனர்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் ஸ்ரீஹரிகோட்டா செல்கிறார். இதற்காக குண்டு துளைக்காத 4 விமானப்படை ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
பிரதமரின் வருகையை ஒட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், டெல்லியிலிருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் கறுப்புப் பூனைப் படையினருடன், சென்னை போலீசாரும் விமான நிலையம், வாகன நிறுத்துமிடம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதே போல் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை இரவு அவர் தங்குகிறார். திங்கட்கிழமை காலை ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் 11 மணிக்கு, மீனம்பாக்கம் திரும்பி, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார் மோடி.
இதனால் விமான நிலையத்தில் பயணிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலையத்தைச் சுற்றிலும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
