கல்வித்துறையை காவிமயமாக்க வேண்டாம்: தொல் திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்வித் துறையை காவிமயமாக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் இராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியப் பெருமக்களைப் போற்றுவதற்கும் ஊக்கப்படுத்துவதற்குமுரிய ஒரு நாளாக தேசம் தழுவிய அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

Tirumavalavan and VelMurugan greet Teachers day

ஆசிரியர் பணி என்பது ஓர் அரசுப் பணி என்பதையும் தாண்டி ஒரு மகத்தான சமூகப் பணியாகும். அடுத்தத் தலைமுறையை கல்வியில் சிறந்த, பண்பில் சிறந்த, நாகரிகத்தில் சிறந்த, ஆளுமைத் திறம் வாய்ந்த ஒரு தலைமுறையை உருவாக்குவதற்கான மாபெரும் பணியாகும். ஒரு தேசத்தின் வளர்ச்சியும் வலிமையும் வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது.

பழங்குடி மக்களுக்கு முதன்முதலாகப் பள்ளிக்கூடம் நிறுவிய மகாத்மா பூலே அவர்களுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கு கல்வி கிடைத்திடப் போராடிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கும், தமிழகத்தில் பஞ்சமர் பள்ளிகளை நிறுவிய அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுக்கும், ஏழை எளியோர் அனைவருக்கும் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கும் இந்நாளில் விடுதலைச் சிறுத்தைகள் தமது நன்றியைக் காணிக்கையாக்குகிறது.

இந்நிலையில், இந்திய அரசு தமது கல்விக் கொள்கையில் ஏராளமான மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

வணிகமயமாக்க கூடாது

கல்வியை வணிகமயமாக்கும் தனியார்மயமாதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைவருக்கும் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அரசின் மொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கைக் கல்வித் துறைக்கென ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தாய்மொழியில் கல்வி

பன்மொழி பேசும் இந்தியத் தேசத்தில் ஒரு மொழியை பிற மொழி மக்களின் மீது திணிப்பதைக் கைவிட வேண்டும். அவரவர் தாய்மொழி வழியில் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும். தேசத்தில் கல்வி பெறாதவர் யாரும் இல்லை என்கிற நிலையை அரசு உருவாக்க வேண்டும்.

காவிமயமாக்குவதா

அத்துடன், அண்மையில் கல்வித் துறை ஆசிரியர் நாளை குரு உத்சவம் எனக் கொண்டாட வேண்டுமெனவும், இந்தியா முழுவதும் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் எனவும் அறிவிப்புச் செய்திருப்பது தமிழ் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்களிடையே வெகுவான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசுக்கு கோரிக்கை

எனவே, சமஸ்கிருதம் மற்றும் இந்தித் திணிப்பு முயற்சிகளை இந்திய அரசு முற்றிலுமாகக் கைவிட வேண்டும். குறிப்பாக, கல்வித் துறையை காவிமயமாக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும் ஆசிரியர் நாளில் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

வெயிட்டேஜ் மதிப்பெண்

மேலும், தமிழக அரசு ஆசிரியர் பணி நியமனங்களில் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிற ‘வெயிட்டேஜ்' மதிப்பெண்கள் அளிக்கும் முறையை முற்றிலுமாகக் கைவிட்டு தகுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே காலி இடங்களை நிரப்ப வேண்டுமெனவும் என்றும் இந்த ஆசிரியர் நாளில் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது''என்று திருமாவளன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

வேல்முருகன் அறிக்கை

இதேபோல் ஆசிரியர் தினத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில், இன்றைய சூழலில் தமிழர்கள் இந்த நாட்டில் குடிமக்களாக இருந்த போதும் ஒவ்வொரு உரிமைக்காகவும் போராடிக் கொண்டிருக்கிற நிலைதான் இருக்கிறது. உலகின் மூத்த குடியான தமிழினம் இன்று தனது உரிமைகளை இழந்து பரிதாபத்துக்குரிய ஒரு தேசிய இனமாக இருக்கிறது.

வீரம் நிறைந்தவர்களாக உருவாக்குங்கள்

இந்த நிலையில் கல்வித் திட்ட பாடங்களுக்கு அப்பால், நமது தேசிய இனத்தின் வரலாறு, மொழி, பண்பாடு பற்றியும் அதன் எழுச்சிமிகுந்த பொற்காலங்கள், வீரம் செறிந்த போராட்டங்கள் குறித்தும் இளைய தலைமுறைக்கு கற்பித்து அவர்களை தேசிய இனத்தின் உரிமைக்காக போராடுகிறவர்களாக உருவாக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமது ஆசிரியர் சமூகத்திடம்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+