ஒரு மதுக் கடையும் இருக்கக் கூடாது, இழுத்து மூடு.. திரும்பிய திசையெல்லாம் கொதிக்கும் பெண்கள்!
சென்னை: தமிழகம் முழுவதும் திரும்பிய திசையெல்லாம் மதுக் கடைகளுக்கு எதிராக மக்கள் குறிப்பாக பெண்கள் கொந்தளித்து வீடுகளை விட்டு வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். திருப்பூர் சம்பவம் அத்தனை பெண்களையும் கொதிப்படைய வைத்துள்ளது.
மனிதத்தன்மையே இல்லாமல் திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண்களை தாக்கியதும், கன்னத்தில் அறைந்த செயலும் பெண்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு மேலும் வலிமையையும், உறுதியையும் கொடுத்துள்ளது. எனவே கெட்டதிலும் ஒரு நல்லதாக, மது அரக்கனுக்கு எதிரான போராட்டம் மேலும் வீச்சடைந்துள்ளது பாண்டியராஜன் புண்ணியத்தால்.

நிர்க்கதியாகி நிற்கிறோம்
எங்க பிள்ளைகளெல்லாம் குடிக்கிறார்கள். கணவர் குடித்தே அழிகிறார். வீட்டுக்கு காசு தருவதில்லை. கஷ்டப்படுகிறோம். குடும்பமே நிர்க்கதியாக நிற்கிறது என்று மதுக் கடை எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்துள்ள பெண்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். குமுறுகிறார்கள்.

ஒரு கடையும் இருக்கக் கூடாது
மதுக் கடைகள் அத்தனையையும் இழுத்து மூட வேண்டும். ஒரு கடை கூட இருக்கக் கூடாது. இதுவரை செத்தது போதும். இனியும் இந்த தமிழகம் சீரழிய வேண்டாம். எல்லோருடைய குடும்பங்களையும் அரசாங்கம் காப்பாற்ற வேண்டும் என்று பெண்கள் கோருகிறார்கள்.

தைரியத்துடன் போராட்டம்
தமிழகத்தின் பல பகுதிகளிலும் மது சனியனுக்கு எதிரான போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. குறிப்பாக ரோட்டோர மதுக் கடைகள் மூடப்பட்ட நிலையில் வீடுகள் உள்ள பகுதிக்கு இடம் பெயர்ந்து வரும் மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

வீட்டுக்கு அருகே மதுக் கடையா
வீட்டுக்குத் தொலைவில் இருந்தபோதே எங்களது ஆண்கள் குடித்து அழிந்தார்கள். இப்போது வீட்டுக்குப் பக்கத்திலேயே கடையைத் திறந்தால் எப்படி குடும்பத்தை நடத்துவது, எங்களது வீட்டுப் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு, நித்தமும் செத்துப் பிழைக்கச் சொல்கிறதா இந்த அரசு.. இதுதான் மக்களுக்கு அரசு செய்யும் நல்லதா என்று பெண்கள் குமுறுகிறார்கள்.

செத்துப் போன அரசு
ஆனால் பெண்களின் கோபமும், கொந்தளிப்பும், கோரிக்கையும் அரசின் காதகளை எட்டியதாகவே தெரியவில்லை. காரணம் அது செத்துப் போய் ரொம்ப காலமாகி விட்டதால். இதனால்தான் கையில் லத்தி இருக்கிறது என்ற தைரியத்தில் பெண் என்றும் பாராமல் பாண்டியராஜன்கள் தடியெடுத்த தண்டல்காரர்களாகியுள்ளனர்.

இழுத்து மூட வைக்கும் சக்தி
பெண்களின் கொதிப்பும், கொந்தளிப்பும், போராட்டமும் மேலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது என்பது மட்டும் உண்மை. இந்த கோபமும், கொதிப்பும் அத்தனை மதுக் கடைகளையும் பொசுக்கும், இழுத்து மூட வைக்கும் என்று நம்புவோம்.












Click it and Unblock the Notifications