காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம்
குமரி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர் அனிஷின் உடல் அவரது சொந்த ஊரான சித்திரங்கோட்டில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 8ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் வழக்கம் போன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழக வீரர் அனிஷ் பலியானார்.

அவரின் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் நிதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் அனிஷின் உடல் ஜம்மு காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சித்திரங்கோடு கிராமத்திற்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டது.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது கைத்தறித் துறை அமைச்சர் கோகுல இந்திரா, கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் அனிஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பிறகு கோகுல இந்திரா அதிமுக அரசின் சார்பில் ரூ.10 லட்சத்தை அனிஷின் குடும்பத்திடம் அளித்தார். அனிஷின் உடல் 24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வீரமரணம் அடைந்த அனிஷுக்கு அஞ்சலி செலுத்த சித்திரங்கோடு, மணலிக்கரையில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications