பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறுக - அரசை கண்டித்து பாமக, திமுக ஆர்ப்பாட்டம்
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாமக, திமுக அறிவித்துள்ளன.
சென்னை: பேருந்து கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 25-ம் தேதி தமிழகம் முழுவதும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திமுக 27ஆம் தேதி ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு என்பது நடைமுறையில் அதிமுக அரசால் அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது. புதிய பேருந்து கட்டணம் இன்று காலை நடைமுறைக்கு வந்த பின்னரே கட்டண உயர்வின் முழு அளவை தங்களால் உணர முடிந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பல இடங்களில் சாதாரண விரைவுப் பேருந்துக் கட்டணம் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களையும், ரயில்களின் உயர்வகுப்புக் கட்டணங்களையும் விட அதிகமாக உள்ளது. ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ஏற்கெனவே அதிகமாக உள்ள நிலையில், தமிழக அரசின் கட்டண உயர்வு அறிவிப்பைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்க தனியார் பேருந்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
தனியார் பேருந்துகள் கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகவே கட்டணம் இந்த அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பதாகவும், இதற்காக தனியார் பேருந்து நிறுவனங்களிடமிருந்து மிகப் பெரிய அளவில் கையூட்டு பெறப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசின் இந்த துரோகத்தை மன்னிக்க முடியாது.
பேருந்து கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
திமுக 27ஆம் தேதி போராட்டம்
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ''ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை மிக மோசமாக பாதிக்கும் வகையில் இரவோடு இரவாக 3,600 கோடி ரூபாய் அளவுக்கு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியிருக்கும் அதிமுக அரசு மக்களின் அன்றாட வாழ்வுடன் விபரீத விளையாட்டை நடத்தியிருக்கிறது.
ஆங்காங்கு இதை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைப்பதும், போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் போன்றோர் மக்களின் போராட்டத்திற்கும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கும் ஆணவத்துடன் பதிலளித்திருக்கும் போக்கும் இந்த அரசை வழிநடத்திச் செல்லும் அமைச்சரவைக்கும், அதற்கு தலைமையேற்றிருக்கும் முதல்வருக்கும் இதயத்தில் ஈரமில்லை என்ற கொடூர மனப்பான்மையை எடுத்துக்காட்டுகிறது.
ஆகவே கடுமையான பேருந்து கட்டண உயர்வு, ஜனநாயக ரீதியில் போராடும் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தடியடி, அமைச்சர்களின் ஆணவப் பேச்சு போன்றவற்றைக் கண்டித்தும், பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் திமுக சார்பில் 27ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications