தமிழக மீனவர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கச்சத்தீவு மீட்பு. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கைக்கு அரசு முறை பயணமாக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்து மீட்டு வர வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பாக் வளைகுடா பகுதியில் வாழும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக 02.04.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1974 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்தியா-இலங்கை இடையேயான கச்சத்தீவு ஒப்பந்தம்தான் நீடிக்கும் இப்பிரச்சனைக்கு அடிப்படையாக உள்ளது.

கச்சத்தீவும் கருணாநிதி- இந்திராவும்

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாடு அரசு உறுதியுடன் எதிர்க்கிறது. 1974-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்போது கடுமையாக எதிர்த்தனர். 28.06.1974 அன்று மத்திய அரச, கச்சத்தீவு ஒப்பந்தத்தில் மாநில அரசின் இசைவின்றி கையெழுத்திட்ட பிறகு, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக மறுநாளே 29.06.1974 அன்று தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய தினமே அப்போதைய இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசின் முடிவை வன்மையாக எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 21.08.1974 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக மீனவர் துயரம்

தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க, கச்சத்தீவினை திரும்பப் பெற வேண்டும் என்ற நிலையான கோரிக்கையை வலியுறுத்தி, 03.10.1991, 03.05.2013, 05.12.2014 ஆகிய நாட்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இதே போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதாலும், அவர்களது படகுகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்படுவதாலும், கடலோர மீனவ சமுதாயத்தினரின் வாழ்க்கை மிகுந்த கவலைக்குரியதாகி இருக்கிறது.

மோடியுடனான முதல் சந்திப்பு

17.06.2021 அன்று பிரதமருடன் நடைபெற்ற முதல் சந்திப்பின்போது, இப்பிரச்சினையை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் முந்தைய கோரிக்கைகளை அடுத்தடுத்த சந்திப்பின் போதும் வலியுறுத்தினோம். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவது குறித்து 2021 ஆம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கும் பிரதமர் அவர்களுக்கும் பலமுறை கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.

ஒரே ஆண்டில் 530 மீனவர்கள் கைது

2024 ஆம் ஆண்டில், 530 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 147 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நமது மீனவர்களுக்கு அதிகபட்ச சிறைத்தண்டனையும், பெருந்தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது; அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விடப்படுகின்றன.

இலங்கையின் இத்தகைய தீவிர நடவடிக்கைகள் நமது மீனவர்களை வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளி இருக்கிறது. இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு ஒரே வழி கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

கச்சத்தீவு மீட்பு நடவடிக்கை

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை உடனடியாக மறு ஆய்வு செய்து, கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்.அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் இந்தியப் பிரதமர், இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டுவர வேண்டும் என 02.04.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியா- இலங்கை ஒப்பந்தம் மறு ஆய்வு

எனவே நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

Take a Poll
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த பிரதமர் யார்?

இந்திரா காந்தி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+