பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு திருநாவுக்கரசர் கண்டனம்
பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிக்கை விடுத்துள்ளார்.
அதில் '' மத்தியில் பா.ஜ.க அரசு ஆட்சியில் அமைந்தது முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைகிற போது அதற்கு ஈடாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கலால் வரியை உயர்த்தி அரசு கஜானாவை நிரப்புவதில் தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த 28 மாதங்களாக மத்திய பா.ஜ.க அரசு பலமுறை பெட்ரோல் , டீசல் விலையை உயர்த்தி வருகிறது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 86 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
இத்தகைய விலை உயர்வுகளை ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு அறிவித்து வருகிறது. வாழைப்பழத்தில் ஊசி குத்துவதைப் போல இத்தகைய விலை உயர்வுகள் 15 நாளைக்கு ஒரு முறை அறிவிக்கப்பட்டுள்ளன. இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில உள்ள பதான்கோட்டில் உள்ள இந்திய விமான தளத்திற்குள் கடந்த ஜனவரி 2016இல் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியதை செய்தியாக வெளியிட்ட என்.டி.டி.வி இந்தி தொலைக்காட்சி ஒளிப்பரப்பை நவம்பர் 9ஆம் தேதி பிற்பகல் ஒரு மணி முதல் மறுநாள் பிற்பகல் ஒரு மணி வரை தடைசெய்து மத்திய செய்தி ஒளிப்பரப்புத் துறை ஆணையிட்டுள்ளது.
நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட 10 மாதங்கள் கழித்து தொலைக்காட்சி நிறுவனத்தை பழிவாங்கும் நோக்கோடு மத்திய பா.ஜ.க அரசு இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெறிக்கிற செயல் ஆகும். இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications