தவிக்கும் தமிழகம்... அமைச்சர்கள் உண்டு, ஆட்சி எங்கே? உறுப்பினர்கள் உண்டு, பேரவை எங்கே?
வறட்சியால் தமிழகம் தவியாய் தவிக்கும் நிலையில் செயலற்ற ஆட்சியாக இருப்பது மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
-பா. கிருஷ்ணன்
தமிழகத்தில் இப்போது இரு வேறு வகையான பிரச்சினைகள் இருக்கின்றன. அண்ணா திமுகவின் தலைவர் யார், யார் உண்மையான விசுவாசி, குடும்ப ஆதிக்கம் முடிந்துவிட்டதா, ஜனநாயகம் ஏற்படுகிறதா, கூட்டுத் தலைமை உருவாகிறதா என்ற பிரச்சினைகள் ஒரு புறம் இருக்கின்றன. அவை குறித்து, ஓ. பன்னீர்செல்வம், கே.பி. முனுசாமி, மதுசூதனன், ஜெயகுமார், எடப்பாடி பழனிச்சாமி, வைத்தியலிங்கம், தம்பிதுரை, டிடிவி தினகரன், சிறையில் உள்ள சசிகலா உள்ளிட்டோர் கவலைப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மறுபுறம், கோடையின் கொடுமை அதிகரிப்பு, தண்ணீர்ப் பஞ்சத்தின் தலைவிரித்தாடும் நிலை, மெட்ரோ ரயில் போடுவதால், சாலைகளிலும் வீடுகளிலும் ஏற்படும் திடீர் திடீர் பாதிப்புகள், பெட்ரோல் விலை உயர்வு, பெட்ரோல் நிலையம் மூடுதல், எல்லாவற்றுக்கும் மேலாக இரு மாதங்களாக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், நீட் தேர்வு பாதிப்பு தருமா, அல்லது எப்படி எதிர்கொள்வது என்ற பிரச்சினை, மீண்டும் ஹைட்ரோ கார்பன் போராட்டம் தோன்றும் நிலை இப்படி மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பொதுமக்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒரு காலத்தில் ஏகப்பட்ட தலைவர்கள் இருந்தனர். கருணாநிதி, ஜெயலலிதா, ஜி.கே. மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, நல்லகண்ணு எனப் பல தலைவர்கள் தேவைக்கு ஏற்ப செயல்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. அப்போதெல்லாம் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் ஏதாவது ஒரு தீர்வு நிச்சயம். நிலையான முடிவை எதிர்பார்க்கலாம் என்று மக்கள் காத்திருக்க முடிந்தது. இப்போது, எல்லாமே தலைகீழ்.
சில தலைவர்கள் இல்லை. சிலர் செயல்படாத நிலை. இதனால், தவிப்பது மக்கள். ஆளும் கட்சிக்கு சட்டப் பேரவையில் 122 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், சட்டப் பேரவை நடக்கவில்லை. ஆட்சியில் 25க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் உள்ளனர். ஆனால், அரசு இயங்கவில்லை.
எதிர்க்கட்சிக்கு 90 உறுப்பினர்கள் இருந்தாலும், என்ன செய்கிறார்கள் என்று புரியவில்லை. எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு செயல் தலைவர் உருவான பிறகு, செயல்படுவது குறைவாகவே இருக்கிறது.
கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் எல்லா மாநிலங்களிலும் உள்ளது என்பதை மறுக்க இயலாது. ஆந்திரம் சென்னைக்குக் குடிநீர் தர இயலாது என்று கூறிவிட்டது. உச்ச நீதிமன்றமோ, நடுவர் மன்றமோ தீர்ப்பளித்தாலும் தண்ணீர் இல்லை என்று கர்நாடகம் கைவிரிக்கிறது.
இந்த நிலையில், தண்ணீர்ப் பிரச்சினையைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்பது குறித்து ஆட்சியாளர்கள் சிந்தித்ததாகவே தெரியவில்லை. இந்தியாவிலேயே மிக நீண்ட கடலோரப் பகுதியைக் கொண்ட மாநிலத்தில் தமிழகம் குறிப்பிடத் தக்கது. இங்கே மீன் வளத்துக்குப் பஞ்சமில்லை. கடல்நீரைக் குடிநீராக்கி, நிலத்தின் தாகத்தைத் தணிப்பது, நிலத்தடி நீரைப் பாதுகாக்க வழிவகை கண்டறிவது, வெற்று நிலமாகிவிட்ட இந்த நேரத்திலாவது, ஏரி, குளம், குட்டைகளைத் தூர் வாரி, ஆழப்படுத்தி நீரைத் தேக்கிவைக்கும் நடவடிக்கையில் இறங்குவது என்பன போன்ற விஷயங்களில் ஈபிஎஸ், ஓபிஎஸ் என யாரும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
தலைவருக்கு யார் உண்மையான விசுவாசி, கட்சிக்கு யார் நிஜமான விசுவாசி என்பதற்குப் பட்டிமன்றம் நடத்துவதால் பயனில்லை. மக்களுக்கு யார் விசுவாசியாக இருக்கிறார்கள் என்பதுதான் அவர்களது அரசியல் விதியை நிர்ணயிக்கும் என்பதை தேர்தல்களே நிரூபித்து வருகின்றன.
ஆளுமை மிக்க கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் தலைமையிலான கட்சிகளுக்கே தேர்தலில் தோல்வியைப் பரிசாகக் கொடுத்துள்ளனர் தமிழக மக்கள். இது தேசிய அளவிலும் நடந்திருக்கிறது. மக்கள் அரசியலைப் பொழுதுபோக்காகக் கருதுகிறார்கள் என்பது ஒரு வகையில் உண்மை என்றாலும், பாதிப்பு வந்தால், எந்தப் பொழுதுபோக்கையும் கைவிட துணியமாட்டார்கள்.
கிரிக்கெட், கால்பந்து ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருக்கும்போது, அங்கே விபத்து நேர்ந்தால் அப்போதும் பொழுதுபோக்கிலா நாட்டம் செலுத்துவார்கள்.... திரையரங்கில் சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கும்போது, விபரீதம் நேர்ந்தால், திரைப்படத்தையா தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்...
மக்கள் உறங்குகிறார்கள் என்று அரசியல்வாதிகள் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள். மாறாக அவர்களது கோபம் எப்போது வரும் என்பதை அறியாமல் உறங்கிக் கொண்டிருப்போர் அரசியல்வாதிகள்தான்.
உத்தரப்பிரதேசத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடந்த சைக்கிள் சண்டைக்கு முற்றுப் புள்ளி வைத்தது சட்டப் பேரவைத் தேர்தல். அதைப் போல செயல்படாத ஆட்சிக்கும், மக்கள் நலனில் அக்கறை காட்டாத கட்சிகளுக்கும் சரியான பாடம் புகட்ட ஒரே வழி மீண்டும் தேர்தல்!
ஆர்கே நகர் தொகுதியில் முறைகேடு காரணமாக தேர்தலை ரத்து செய்யப்பட்டது. செயல்படாமல் இருக்கும் ஆட்சியையும் இயங்காத சட்டப் பேரவையையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்படுமா. தேர்தல் மூலம் புது அரசு உருவாக இயலா?












Click it and Unblock the Notifications