கிடங்குகளில் ஏசியை சுவர் இழுக்காமல் இருக்க 'தெர்மகோல்'.... அமைச்சர் செல்லூர் ராஜூவின் அடுத்த பிளான்
சென்னை கோயம்பேட்டில் இயங்கிவரும் குளிர்பதன பொருட்கள் சேமிப்பு கிடங்குப் பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டு பணிகள் நடைபெறும் விதம் குறித்து விளக்கும் போதும் தெர்மகோலை குறிப்பிட மறக்கவில்லை.
சென்னை: கோயம்பேடு குளிர்பதன கிடங்குப் பணியில் ஏசியை சுவர் இழுக்காமல் இருக்க ரெஃப்லெக்சர், தெர்மகோல் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேடு காய்கறி மற்றும் கனிக்கடைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குளிர் பதனக் கிடங்குகள் பணியை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு கூட்டுறவு வாரியம் சார்பாக சென்னையில் 2 இடங்களில் குளிர்பதன சேமிப்பு கிடங்குகள் செயல்பட்டு வருகிறது. இவை 1995ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது வணிகர்களுக்கு நல்ல முறையில் உதவி செய்து வருகிறது.
ஆனால் கட்டிடம் கட்டப்பட்டு ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆகிவிட்டதால் குளிர்பதனக் கிடங்குகள் நவீனமயமாக்கப்பட்ட வருகின்றன. சுவர் அந்த காலத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டதால் குளிர் பதன கிடங்கிற்காக இயக்கப்படும் ஏசியில் இருந்து வரும் குளிர் காற்றை சுவரே இழுத்துக் கொள்கிறது. இதனால் ரிஃப்ளக்சர், தெர்மகோல் உள்ளிட்டவற்றை கொண்டு அவற்றை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகளைத் தான் நான் இன்று பார்வையிட்டேன், என்றார்.

நவீன வசதியுடன் குளிர்பதன கிடங்கு
2,500 மெட்ரிக் டன் பொருட்களை சேமிக்கும் குளிர்பதனக் கிடங்கு 6 தளங்களில் செயல்பட்டு வருகிறது, இதன் சேமிப்புத் திறனை அதிகரிக்க ஒரு தளத்தில் 2 கிடங்குகள் என மொத்தம் 12 அறைகளில் இந்த வசதி விரிவுபடுத்தப்படும். சுமை தூக்கும் தொழிலாளர்களின் பாரத்தை குறைக்க லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கடன் தள்ளுபடி
தமிழகத்தில் சுமார் 12 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் சுமார் 12.02 லட்சம் ரூபாய் விவசாயக் கடன் அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் செல்லூர் ராஜூ கூறினார்.

சிறு விவசாயிகளுக்கு மட்டுமே
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டே அரசு செயல்பட்டு வருகிறது என்றார் அமைச்சர். மேலும் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு விவசாயக் கடன் தள்ளுபடி இல்லை என்றும் செல்லூர் ராஜூ கூறினார்.

நிச்சயம் கை கொடுக்கும்
வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மகோல் போட்டு மூடியதால் உலகம் முழுவதும் புகழ் பெற்றார் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆனால் இதையெல்லாம் சட்டை செய்யாமல் தொடர்ந்து தெர்மகோலை அடுத்தடுத்த திட்டங்களிலும் அறிவிக்கிறார். ஆனால் ஆவியாகும் திட்டத்தில் கைகொடுக்காவிட்டாலும் ஏசி இழுக்காமல் இருப்பதற்காக சுவற்றில் பூசப்படும் இந்த திட்டம் நிச்சயம் கைகொடுக்கும்.












Click it and Unblock the Notifications