ஓஎன்ஜிசி பணியை கைவிடுக... நெய்குன்னம் நோக்கி 500 பேர் பேரணி!
தஞ்சாவூர் மாவட்டம் நெய்குன்னத்தில் நடக்கும் ஓஎன்ஜிசி பணியை தடுக்க அம்மாபேட்டையில் இருந்து திருமாவளவன், பாலகிருஷ்ணன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோருடன் 500 பேர் பேரணியாக தொடங்கியுள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் நெய்குன்னத்தில் நடக்கும் ஓஎன்ஜிசி பணியை தடுக்க அம்மாபேட்டையில் இருந்து திருமாவளவன், பாலகிருஷ்ணன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பேரணி தொடங்கியுள்ளனர். இவர்களுடன் கிராம மக்கள் 500 பேரும் ஓஎன்ஜிசி பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் 5,000 சதுர கி.மீ. சுற்றுப்பகுதியில் 39 இடங்களில் எண்ணெய் நிறுவனம் கச்சா எண்ணெய் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அம்மாப்பேட்டை அருகே தீபாம்பாள்புரத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில் அம்மாப்பேட்டை அடுத்த நெய்குன்னத்தில் கச்சா எண்ணெய்க்கான கிணறு அமைக்கும் பணியை எண்ணெய் நிறுவனம் துவங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முதற்கட்டமாக கச்சா எண்ணெய் எடுத்து விட்டு பிறகு 1,600 அடி முதல் 2,000 அடி வரை ராட்சத ஆழ்குழாய்கள் அமைத்து மீத்தேன் எரிவாயு எடுக்க திட்டமிட்டுள்ளதாக காவிரி சமவெளி படுகை பாதுகாப்பு இயக்கம் குற்றம்சாட்டுகிறது. எனவே கச்சா எண்ணெய் மற்றும் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை மேற்கு தஞ்சை முழுவதும் தடுத்து நிறுத்தி விவசாய நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தி விவசாயிகளை ஒருங்கிணைத்து பொதுமக்களை திரட்டி விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அம்மாபேட்டையில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, காவிரி உரிமை மீட்புக் குழுவின் தலைவர் பெ. மணியரசன் உள்ளிட்டோர் தலைமையில் 500 பேர் பேரணியாக செல்கின்றனர். நெய்குன்னம் வரை செல்லும் இந்தப் பேரணியின் முடிவில் ஓ.என்.ஜி.சி பணிகளை நிறுத்தக் கோரி போராட்டமும் நடைபெற உள்ளது.




Click it and Unblock the Notifications
