தமிழகத்தை பலிகொடுப்பதும் பலியெடுப்பதுமே காங்கிரஸ், பாஜகவின் பரம்பரை கொள்கை!
தமிழக மீனவர்களின் உயிரை பலிகொடுத்து வாழ்வாதாரங்களை பலியெடுக்கும் காங்கிரஸ், பாஜகவுக்கு தமிழகம் தக்க பாடம் புகட்டும்.
சென்னை: மத்தியில் ஆண்ட காங்கிரஸுக்கும் ஆளும் பாஜகவுக்கும் தமிழகத்தை பலிகொடுப்பதும் பலியெடுப்பதும்தான் பரம்பரை கொள்கை என்பதை மீண்டும் மீண்டும் வங்கக் கடலில் மாண்டுபோகும் மீனவர்கள் உயிர்கள் பறைசாற்றிக் கொண்டே இருக்கின்றன.
தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள கச்சத்தீவை அன்று ஆண்ட காங்கிரஸ் சொந்த அரசியல் லாபங்களுக்காக சிங்கள தேசத்துக்கு தாரைவார்த்து கொடுத்தது. இது தாரைவார்ப்பு அல்ல தமிழர் உயிரை பலிகொடுப்பது என்பதை நீடிக்கும் மீனவர் படுகொலைகள் காலந்தோறும் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.
இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் பெயரால் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்ற அபாண்டத்தின் பெயரால் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் வங்கக் கடலில் காக்கை குருவிகளைப் போல சுட்டுவீழ்த்தப்பட்டனர். ஆனால் இந்திய மத்தியப் பேரரசு கிஞ்சித்தும் இதைப் பற்றியெல்லாம் வாயே திறக்கவில்லை.

800 மீனவர்கள் படுகொலை
இதுவரை ஆண்ட காங்கிரஸ், பாஜக ஆட்சிக் காலங்களில் 800-க்கும் அதிகமான சொந்த நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இந்திய தேசத்தின் குடிமக்கள்தான் என்ற துளி அக்கறையுமே இந்த பெரும் கட்சிகளுக்கும் இருந்ததே இல்லை. தமிழக மீனவர் குடும்பங்களின் கதறலும் ஒப்பாரியும் இந்த மனசாட்சியற்ற இந்திய தேசிய கட்சிகளின் இதயங்களில் சொட்டு ஈரத்தையும் விதைக்கவில்லை.

சபதம் போட்ட பாஜக
இதனால்தான் இன்று பிரிட்ஜோ என்ற இளம் தமிழரின் உயிர் சிங்களக் காடையரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகிப் போய் கிடக்கிறது. ஆண்ட காங்கிரஸ் அப்படித்தான்.. இதோ உத்தமசீலர்கள் நாங்கள் ஆட்சிக்கு வருவோம்... மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்போம்; உங்கள் மீது தாக்குதல் நடத்தவிடமாட்டோம் என ராமேஸ்வரம் கடலில் இறங்கி சபதம் போட்டது பாஜக.

என்ன நடவடிக்கை?
இந்த பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் படுகொலைகளே பரவாயில்லைபோல என நினைக்கும் அளவுக்கு சித்ரவதைகளும் வாழ்வாதர பறிப்புகளும் அதாவது பலிகொடுப்புகளும் வகைதொகையின்றி அரங்கேறிவிட்டன... நூற்றுக்கும் அதிகமான தமிழக மீனவர் படகுகள் இலங்கை கடற்கரை ஓரங்களில் சிதிலமடைந்து கிடக்கின்றன... இவற்றை மீட்க துளி ஒரு நடவடிக்கையையுமே பாஜக அரசு மேற்கொள்ளவில்லை..

பிரிட்ஜோ உயிருக்கு பதில் என்ன?
இதை கேட்டால் எங்கள் ஆட்சிக் காலத்தில் ஒரு துப்பாக்கிச் சூடாவது நடந்ததா? ஒரு உயிரேனும் போனதா? என பசப்பு மொழி பேசி பிதற்றி வந்தது பாஜக கூட்டம்.. இதோ பிரிட்ஜோவின் உயிர் பறிபோய்விட்டதே... ஏமாற்று வார்த்தைகளை அள்ளிவிட்ட பாஜகவினரே உங்களால் பிரிட்ஜோவின் உயிரை மீட்டுத் தர முடியுமா?

படையெடுத்த சிங்களம்
கடலுக்குப் போகும் நாளெல்லாம் செத்து செத்து திரும்பும் எங்கள் தமிழக மீனவர்களின் பாரம்பரிய தொழிலையே ஒட்டுமொத்தமாக இந்திய கடல் எல்லைக்குள் வந்தே சூறையாடி வருவது பற்றி நீங்கள் கவலைப்படாததன் இருந்ததன் விளைவு... தனுஷ்கோடி அருகே படையெடுத்து வந்து தமிழக மீனவர் உயிர்களை பதம் பார்க்கும் துணிச்சல் சிங்கள கடற்படைக்கு வந்திருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?

பாடம் உறுதி
கடந்த கால தமிழகம் போராடிவிட்டு ஒப்பாரி வைத்துவிட்டு அடுத்த நாள் வேலைக்குப் போய்விடும் என தப்புக் கணக்கை இனியும் காங்கிரஸும் பாஜகவும் போட முடியாது.. மெரினா புரட்சியும் நெடுவாசல், தாமிரபரணி போராட்டங்களையும் பார்த்தும் திருந்தாமல் போன காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு பிரிட்ஜோவின் படுகொலை உச்சகட்ட பாடத்தை தராமல் ஓயாது என்பது மட்டும் உறுதி!












Click it and Unblock the Notifications