இடஒதுக்கீடு தராவிட்டால், எங்களின் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் - தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை!
சென்னை: நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைப்படி, முஸ்லீம்களுக்கு மத்தியில் 10 சதவீதமும், மாநிலங்களில் 7 சதவீத இட ஒதுக்கீடும் அளிக்கப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் எங்களின் எதிர்ப்புகளை தேர்தல் நேரத்தில் சந்திக்க கட்சிகள் தயாராக இருக்கட்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாப்தீன் எச்சரித்துள்ளார்.
ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்தக் கோரி சென்னை, கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுவை, காரைக்கால், மும்பை உள்ளிட்ட இடங்களில் ஜவ்ஹீத் ஜமாத் சார்பில் ஜனவரி 28ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
லட்சக்கணக்கில் இந்தப் போராட்டத்திற்கு ஆண்களும், பெண்களுமாக இஸ்லாமியர்கள் திரண்டதால் போலீஸாரே ஸ்தம்பித்துப் போயினர். இருப்பினும் போராட்டத்தின்போது எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் போராட்டம் அமைதியாக நடந்தது.
இதில் கலந்து கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாப்தீன் பேசுகையில், இந்தியாவில் மோசமாக உள்ள முஸ்லிம்களின் நிலையை உயர்த்த வேண்டுமானால், அவர்களுக்கு மத்தியில் 10 சதவிகித இட ஒதுக்கீடும், மாநிலங்களில் 7 சதவிகித இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிவுறுத்தியது. அது அறிக்கை அளித்து வருடங்கள் ஓடிவிட்டன.
ஆனால், இதுவரை ஒன்றும் நடந்தபாடில்லை. எனவேதான், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, இத்தனை லட்சக்கணக்கான மக்களை இங்கு கூட்டியுள்ளோம். காசு கொடுத்தும் சாராயம் வாங்கிக் கொடுத்தும் இந்தக் கூட்டம் இங்கு கூட்டப்படவில்லை.
தி.மு.க., அ.தி.மு.க. என்று இரண்டு கட்சிகளும் கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியில், முஸ்லிம்களுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு போதாது. எனவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதை உயர்த்தி வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து அமர்ந்த பிறகு ஒன்றும் செய்யவில்லை.
அதேபோல் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அதற்கு முன்பாக, இப்போது அதிகாரத்தில் உள்ள கட்சிகளிடம் இங்கு கூடியுள்ள கூட்டம் தெரிவித்துக்கொள்வது ஒன்றுதான்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்குள், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிவிடுங்கள். எங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி, நீங்கள் ஆதாயம் அடைந்துகொள்ளுங்கள். எங்கள் ஓட்டுக்களை முழுமையாகப் பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது, எங்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளத் தயாராய் இருங்கள் என்றார் அவர்.
உண்மையில் இது சிறை நிரப்பும் போராட்டமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாத காரணத்தால் போலீஸார் யாரையும் கைது செய்யவில்லை.












Click it and Unblock the Notifications