மவுலிவாக்கம் கட்டிடம் இடிக்கப்பட்டதன் பின்னணியில் இப்படி ஒரு சதியா? ராமதாஸ் சொல்வதை பாருங்கள்
முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்களை அழிக்கவே மவுலிவாக்கம் கட்டடம் இடிக்கப்பட்டதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டிருந்த 11 அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட்டது அதில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பான சாட்சியங்களை அழிப்பதற்காகவே என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ''சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு இடிந்து விழுந்த 11 மாடிக்கட்டடம் தவிர எஞ்சியிருந்த மற்றொரு 11 மாடிக்கட்டடமும் வெடி வைத்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் விலகிவிட்டாலும் அதிலுள்ள வீடுகளை வாங்கியவர்களுக்குத்தான் இன்னும் விடிவு பிறக்கவில்லை.

மவுலிவாக்கத்தில் பிரைம் டிரஸ்ட் ஹெயிட்ஸ் என்ற பெயரில் அடுக்குமாடி கட்டடத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தலா 11 மாடிகளை கொண்ட இரு உயர் அடுக்கு கட்டடங்களில் மொத்தம் 88 வீடுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
ஒரு கட்டடத்துக்கு the Faith என்றும் இன்னொரு கட்டடத்துக்கு The Belief என்றும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இவ்வாறு ஒட்டுமொத்த பெயரில் தொடங்கி தனித்தனி பெயர் வரை அனைத்திலும் 'நம்பிக்கை' இருந்த போதிலும், அதை நம்பி வாங்கிய மக்களின் நம்பிக்கைத்தான் காப்பாற்றப்படவில்லை. தரமற்ற வகையில் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி கட்டடங்களில் ஒன்று கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம்28ஆம் தேதி விபத்துக்குள்ளாகி தரை மட்டமானது. இவ்விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்றிருந்த இன்னொரு கட்டடம் தான் நேற்று தகர்க்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்த கட்டடம் குறித்த பாதுகாப்பு அச்சங்கள் முற்றிலுமாக முடிவுக்கு வந்திருக்கின்றன. ஆனால், இக்கட்டடத்தில் வீடுகளை வாங்க் பணம் கட்டியவர்களின் நிலை தான் மேலும், மேலும் பரிதாபத்துக்குரியதாக மாறி வருகிறது. இந்தக் கட்டடத்தில் மொத்தம் 88 வீடுகள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு 60 கோடி என்று கூறப்படுகிறது. அவற்றில் 48வீடுகளை மக்கள் வாங்கியிருந்தனர். அந்த வீடுகளுக்காக அவர்கள் மொத்தம் ரூ.20.28 கோடி பணம் செலுத்தியிருந்தனர். 2014ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்துக்குப் பிறகு வீடுகள் இல்லாமல் போன நிலையில் அதற்காக அவர்கள் செலுத்திய பணத்தை திருப்பித்தர பிரைம் சிருஷ்டி மறுத்து விட்டது.
இந்தத் தொகையை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்து விட்டது. இதனால் தங்களின் சொத்தை விற்றும், வங்கிக் கடன் வாங்கியும் வீட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் கடன்காரர்கள் ஆனது தான் மிச்சம்.
சென்னையில் வாழும் நடுத்தர மக்களின் முதன்மைக் கனவு என்பது சொந்த வீடு வாங்குவதுதான். அதன்படி தான் அவர்கள் மவுலிவாக்கம் கட்டடத்தில் வீடுகளை வாங்கினார்கள். கட்டடம் இடிந்து விழுந்ததற்கு அவர்கள் எந்த வகையிலும் காரணமில்லை. ஏரிக் கால்வாய் என பத்திரப்பதிவுத்துறை ஆவணங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தில் சட்டவிரோதமாக கட்டடம் கட்டிய கட்டுமான நிறுவனமும், கையூட்டு வாங்கிக்கொண்டு அதற்கு அனுமதி அளித்த அரசும் தான் கட்டடம் இடிந்ததற்கு காரணமாகும். சட்டவிரோத செயல்களால் பயனடைந்த கட்டுமான நிறுவனமும் அதற்குத் துணை நின்ற ஆட்சியாளர்களும் கிடைத்தவரை சுருட்டிக்கொண்டு ஒதுங்கி விட, எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் ஒட்டுமொத்த இழப்பையும் தாங்க வேண்டும் என்பது என்ன வகை நீதி?
மவுலிவாக்கம் கட்டடத்தை கட்டிய நிறுவனம் அதிமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அதிகாரித்தின் உச்சத்தை தற்காலிகமாக தொட்டுப்பார்க்கும் அமைச்சரின் பினாமி நிறுவனம் என்று கூறப்படுகிறது. இந்நிறுவனத்துக்கு அடுத்தடுத்து விதிகளை தளர்த்தி அனுமதி வழங்கியது முந்தைய ஆட்சியில் ஆதிக்கம் செலுத்திய நால்வரணியின் அங்கமாக இருந்தவர். இந்த கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியவர் முன்னாள் பெண் அமைச்சர். ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் தான், முறைகேடுகளின் சாட்சியங்களையெல்லாம் அழிக்கும் நோக்குடன் இக்கட்டடமும் இடிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்களுக்கும் ஆட்சியாளர்கள் துணை போனதால், வீடுகளை வாங்க பணம் செலுத்தி விட்டு நடுத்தெருவில் நிற்கும் மக்களுக்கு அரசு தான் இழப்பீடு வழங்க வேண்டும்.
சேமித்து வைத்திருந்த பணத்தை வீட்டுக்காக முதலீடு செய்துவிட்டு, வங்கிக்கடன் தவனைக்காக மாத ஊதியத்தில் பெரும்பகுதியை செலுத்திவிட்டு வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கும் மக்களின் துயரங்களை அரசு உணர வேண்டும். மவுலிவாக்கம் வீட்டுக்காக அவர்கள் செலுத்திய பணத்தை அரசு திருப்பி வழங்க வேண்டும் அல்லது போரூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி வீடுகளில் அவர்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும்'' என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications