கோபம் குறைய விசுவாமித்திரர் கோவிலுக்கு போன விஜயகாந்த்
தூத்துக்குடி: கோபம் குறைந்து பொறுமை வரவேண்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா உடன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விசுவாமித்திரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
விஜயகாந்த் என்றாலே கோபக்காரர் என்றுதான் பெரும்பாலோனோர் கூறி வருகின்றனர். அதற்கேற்றார்போல தேர்தல் பிரச்சாரமோ, செய்தியாளர் சந்திப்போ விஜயகாந்தின் வாய் பேசுவதை விட அவரது கைதான் அதிகம் பேசுகிறது. சினிமாவில் விஜயகாந்த் கோபத்தோடு சண்டை போட்டதை ரசித்தவர்கள் கூட அவர் அரசியல்வாதியான பிறகு கோபத்தோடு பேசுவதை விமர்சனம் செய்கின்றனர்.
கோபத்தை குறைக்க யோகா பயிற்சி செய்து வந்த விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா உடன் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள விஜயாபதி கிராமத்தில் உள்ள விசுவாமித்திரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தூத்துக்குடி வந்தனர். அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லை.

விஜயகாந்த் சாமி தரிசனம்
இன்று அதிகாலையில் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மட்டும் ஒரு காரில் விஜயாபதியில் உள்ள விசுவாமித்திரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். பின்னர் சிறிது நேரம் அங்கு அமர்ந்து தவநிலையில் பிரார்த்தனை செய்த விஜயகாந்த், அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கும் சென்று வழிபட்டனர்.

விசுவாமித்திரர் கோவில்
விசுவாமித்திரர் முனிவர் அந்த பகுதியில் பொறுமையுடன் தவம் செய்யும் போது தடாகை அவரது தவத்தை கலைப்பார். இதனால் கோபம் கொண்ட முனிவர் கோபத்தை அடக்கி ராமர் - லட்சுமணன் மூலம் தடாகையை அழிப்பார். இதன் நினைவாக அங்கு அந்த கோவில் கட்டப்பட்டுள்ளதாக வரலாறு உள்ளது.

கோபம் குறைய பூஜை
இந்த கோவிலில் சாமி கும்பிட்டு சிறிது நேரம் அமைதியாக தவம் புரிந்தால் கோபம் அடங்கி பொறுமை வரும் என்பது ஐதீகம். எனவே விஜயகாந்த் தனது பிறந்தநாள் நட்சத்திரப்படி இன்று விசுவாமித்திரர் கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

வெற்றிக்காக சிறப்பு பூஜை
தனது அரசியல் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவதற்காகவும் அவர் இங்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications