பாஜகவை மிரட்ட "2006 கருணாநிதி பார்முலா"வைதான் கையில் எடுப்போம்.. அதிமுகவின் அடேங்கப்பா' ஸ்கெட்ச்!
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்திருந்தாலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் கூட்டணி ஆட்சி மட்டும் அமைக்கவே மாட்டோம் என்பதில் அக்கட்சி உறுதியாக இருக்கிறது. 2006-ம் ஆண்டு திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத போதும் காங்கிரஸ், பாமக ஆதரவுடன் 5 ஆண்டுகள் தனித்து ஆட்சி நடத்திய கருணாநிதியின் அந்த பார்முலாவையே கடைபிடிப்போம் என அறிவித்துள்ளது அதிமுக.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது.

அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறும் போது, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும் என்றே தெரிவித்து வருகிறார். சென்னை செய்தியாளர்கள் சந்திப்பிலும் இதனைத்தான் அமித்ஷா கூறியிருந்தார்.
அதிமுக- பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்று அமித்ஷா சொல்லவே இல்லை; தமிழ்நாட்டில் அதிமுகதான் தனித்து ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இதற்கு விளக்கம் தரும் வகையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை தமிழ்நாட்டின் சரித்திரத்தில் எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது. காங்கிரஸ் காமராஜர் காலத்திலும் சரி.. திராவிட கட்சிகளின் காலத்திலும் சரி... தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பதே கிடையாது என பாஜகவுக்கு திட்டவட்டமான பதிலைத் தந்துள்ளார் அதிமுக தம்பிதுரை.
அத்துடன் நிற்காமல், அதிமுகவால் தனித்து பெரும்பான்மை பெற முடியாத சூழ்நிலையிலும் பாஜகவின் ஆதரவை மட்டும் பெறுவோம்; பாஜகவுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் வகையில் கூட்டணி ஆட்சி அமைக்கவும் மாட்டோம் எனவும் தம்பிதுரை விளக்கம் தந்துள்ளார்.
இதற்கு, 2006-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் போது திமுக தலைவர் கருணாநிதி பின்பற்றிய பார்முலாவையே அதிமுகவும் பின்பற்றும் என்பதும் தம்பிதுரையின் விளக்கமாகும்.
2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மைக்கான 117 இடங்கள் கிடைக்கவில்லை. 93 இடங்களில் வென்ற திமுக, காங்கிரஸ்- பாமக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்ரு தனித்தே ஆட்சியை நடத்தியது. 5 ஆண்டுகள் திமுக ஆட்சியை முழுமையாகவும் நிறைவு செய்தது. அப்போது, ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் பங்கு கேட்டது; ஆனால் கருணாநிதியோ கூட்டணி ஆட்சி அமைப்பதாக இருந்தால் முதல்வராக நான் இருக்கமாட்டேன் என ஒரு பதிலை காங்கிரஸ் மேலிடத்திடம் தெரிவித்திருந்தார். இதனை சுட்டிக்காட்டியே தம்பிதுரை இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், கருணாநிதியின் 2006-ம் ஆண்டு பார்முலாவின் படியே, அதிமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும் கூட தனித்தே ஆட்சி அமைப்போம் என உறுதியாக கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications