விவசாயிகளுக்கு வலுக்கிறது ஆதரவு... தந்தை பெரியார் திராவிடர் கழகம் அரை நிர்வாணப் போராட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
இன்று காலை சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தை மாணவர்கள் இளைஞர்கள் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் சென்னையே போக்குவரத்து பாதிப்பால் ஸ்தம்பித்தது.
இதனைத் தொடர்ந்து தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

அரை நிர்வாணப் போராட்டம்
சுமார் 50க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் சாஸ்திரி பவன் அருகில் ஒன்று கூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் அனைவரும் அரை நிர்வாணத்தில் நின்று விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

விவசாயிகள் மனிதர் இல்லையா?
இந்தப் போராட்டம் குறித்து அமைப்பின் சென்னை மாவட்ட செயலாளர் ச. குமரன் பேசியதாவது: டெல்லியில் 31 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை மனிதர்களாகக் கூட மத்தியில் ஆளும் பாஜக அரசு கருதவில்லை.

வரிப்பணம் இனிக்கிறதா?
தமிழர்களிடம் இருந்து மத்திய அரசு வரிப்பணத்தை வசூலிக்காமலா இருக்கிறது? தமிழர்களின் வரிப்பணம் இனிக்கிறது. அவர்களின் போராட்டம் மட்டும் கசக்கிறதா?

ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு
உத்தர பிரதேசத்தில் கேட்காமலேயே பயிர்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இங்கு கேட்டும் கொடுக்க மறுக்கிறது பாஜக அரசு. அவர்கள் ஆளும் மாநிலங்களில் ஒரு மாதிரியாகவும் தமிழ்நாட்டை வேறுமாதிரியாகவும் மோடி அரசு நடத்துகிறது.

பயிர்கடன் தள்ளுபடி
சோறு தண்ணி இல்லாமல் போராடும் விவசாயிகளை காக்க மத்திய அரசுக்கு துப்பில்லை. இதே நிலை தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும். எனவே, விவசாயிகளின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ச. குமரன் கூறினார்.












Click it and Unblock the Notifications