டி.ஆர்.பாலு லாபியில் 'தஞ்சாவூர்' தொகுதியை இழந்த பழனிமாணிக்கம்..
சென்னை: லோக்சபா தேர்தலில் தஞ்சாவூர் தொகுதி யாருக்கு என்று திமுகவில் நடந்த குஸ்தியில் முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கத்தை வீழ்த்தியிருக்கிறார் மற்றொரு முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு.
லோக்சபா தேர்தலில் எப்படியாவது தஞ்சாவூர் தொகுதியை பழனி மாணிக்கத்திடம் இருந்து பறிப்பது என்பதுதான் டி.ஆர்.பாலுவின் நீண்டகால திட்டம். இதற்காக தஞ்சாவூரில் அடிக்கடி தலைகாட்டினார் டி.ஆர்.பாலு. ஒருகட்டத்தில் பழனி மாணிக்கத்துக்கும் டி.ஆர்.பாலுவுக்கும் நேரடி மோதலும் வெடித்தது.

பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர்களுக்கும் டி.ஆர்.பாலுவின் ஆதரவாளர்களுக்கும் அடிதடியில் இறங்கிய சம்பவங்களும் அரங்கேறின. இதற்கு திமுக தலைவர் கருணாநிதியே பஞ்சாயத்தும் செய்ய வேண்டியிருந்தது. லோக்சபா தேர்தலுக்கான விருப்ப மனு கொடுக்கப்பட்ட போது இது உச்சகட்டத்தை அடைந்தது.
தமது தஞ்சாவூரை டி.ஆர். பாலு பறித்துவிட்டால் என்ன செய்வது என நினைத்து திருச்சிக்கும் கேட்டு வைத்தார் பழனி மாணிக்கம். ஆனால் திருச்சியின் அசைக்க முடியாத சக்தியாக வலம் வரும் தமது இருப்புக்கு பழனிமாணிக்கம் ஆபத்தாக இருப்பாரோ என நேரு ஒருபக்கம் காய்நகர்த்தினார்.
இப்படி டி.ஆர்.பாலு, நேருவின் லாபிகளில் சிக்கிய பழனிமாணிக்கம் இப்போது வாய்ப்பே கிடைக்காமல் பரிதாப நிலைக்குப் போய்விட்டார். இருந்தாலும் சீட் தானே வாங்கியிருக்கிறீங்க..எப்படி ஜெயிப்பீங்கன்னு பார்ப்போம் என்கிற பழனிமாணிக்கம் தரப்பு குமுறல் நிச்சயம் தஞ்சாவூர் தொகுதியில் கடுமையாக இருக்கும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications