ஜெ. விரல்ரேகை வைத்த அதிமுகவினர் வேட்புமனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.. டிராபிக் ராமசாமி வழக்கு
சென்னை: ஜெயலலிதா விரல்ரேகையுடன் கூடிய அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்கக்கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மூவரும் கடந்த 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதில், கட்சி சின்னத்தை ஒதுக்கக் கோரும் படிவம் ஏ, வேட்பாளரை அங்கீகரிக்கும் படிவம் பி ஆகியவற்றில் கட்சித் தலைவர் கையொப்பம் இடம்பெற வேண்டும்.

தற்போது அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வரு மான ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று முதல்வர் ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல் ரேகை வேட்பு மனு படிவங்களில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியது.
இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில் அதிமுகவினரின் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், எழுத்தறிவு இல்லாதவர்கள் மட்டுமே விரல்ரேகை வைக்க அனுமதிக்கப்பட்ட வேண்டும் என்றும் உடல்நிலை சரியில்லை என்றால் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் விரல்ரேகை வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேட்புமனுவில் ஜெயலலிதா விரல்ரேகை வைத்ததை வீடியோவில் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவும், அவர் எழுப்பியுள்ள சந்தேகங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications