ஓட்டு எண்ணிக்கைக்கு தடை இல்லை:டிராபிக் ராமசாமி உள்ளிட்டோரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட்
சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது எனவும், தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தலையிட முடியாது என்று கூறி டிராபிக் ராமசாமி, செந்தில் ஆறுமுகம், தலித் பாண்டியன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
திருப்பூரில் ரூ.570 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில் முடிவு தெரியும் வரை தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் பாதுகாப்புக் கழகத் தலைவரும், பிரபல சமூக சேவகருமான டிராபிக் ராமசாமி, தலித் பாண்டியன், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மொத்தம் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களுக்கு எதிராக ரிசர்வ் வங்கி விளக்கம் ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், திருப்பூர் அருகே கைப்பற்றப்பட்ட ரூ.570 கோடி பணம் அனுமதி பெற்றே கொண்டு செல்லப்பட்டது. தற்போது தமிழகத்தில், தேர்தல் நேரம் என்பதால் ரூ.570 கோடி விவகாரம் பெரிதாக்கப்படுகிறது. ஏற்கனவே இதுபோன்ற பெரும் தொகை பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ம் தேதியே பண பரிவர்த்தனைக்கு எங்களிடம் அனுமதி பெறப்பட்டது என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், திருப்பூரில் சிக்கிய ரூ. 570 கோடி பணம் பாரத் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது எனவும், விசாகபட்டினம் பாரத் ஸ்டேட் வங்கி கிளைக்கு கொண்டு செல்லப்பட்டது தான், தங்களின் அனுமதியுடன் தான் பணம் கொண்டு செல்லப்பட்டது எனவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
எனவே இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல. நாளை நடக்க உள்ள வாக்கு எண்ணிக்கை நடத்த தடையில்லை. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
முன்னதாக டிராபிக் ராமசாமி தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்ட சுமார் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாகவும், அதில் 50 சதவீதம் முறையான கணக்கு இல்லாதவை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 14ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள், 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.570 கோடியை பறிமுதல் செய்துள்ளனர். அந்த வாகனங்களில் பயணம் செய்தவர்களிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. தற்போது இந்த பணம் தங்களுடையது என்று பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் உரிமை கோரியுள்ளது.
ஆனால், வங்கி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம், தேர்தல் அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்காமல் உள்ளன. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பெரும் தொகையை எப்படி எடுத்து செல்வது?, ஒரு வங்கி கிளையில் எவ்வளவு பணம் இருப்பு வைக்கலாம்? என்பது தொடர்பான ரிசர்வ் வங்கி ஏற்கனவே சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
ஆனால், இந்த விதிமுறைகளை பின்பற்றாமல், பாரத ஸ்டேட் வங்கியின் கோவை கிளை நிர்வாகம் இந்த தொகையை தங்களது கிளையில் இருந்து எடுத்து செல்லப்பட்டது என்று கூறியுள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய தொகையை ஒரு வங்கி கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு எடுத்துச்செல்வது சாத்தியமற்றது என்று முன்னாள் நிதியமைச்சர் (ப.சிதம்பரம்) கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே, இது சட்டவிரோதமான பணம் என்று தெரிகிறது. மேலும், இதுவரை ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர், அமலாக்கப்பிரிவு மண்டல சிறப்பு இயக்குனர் ஆகியோர் இந்த பணம் குறித்து முறையான விசாரணை நடத்தி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை தரவில்லை.
எனவே, திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும். இந்த தொகை தமிழக சட்டசபை தேர்தலுக்காக கொண்டுவரப்பட்டதா? என்பதை கண்டறியவேண்டும். அதுவரை தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று கடந்த 15ம் தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு கொடுத்தேன். இதுவரை மனுபரிசீலிக்கப்படவில்லை.
எனவே, தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் உத்தரவிடவேண்டும் என்று டிராபிக் ராமசாமி கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications