அம்மா எனக்கு எம்.எல்.ஏ சீட் தருவார்... திருநங்கை சுதா நம்பிக்கை
சென்னை: அதிமுகவில் போட்டியிட சீட் கேட்டு, ஏராளமான திருநங்கைகள், மேளதாளம் முழங்க குத்தாட்டம் போட்டு வந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அம்மா எனக்கு எம்.எல்.ஏ சீட் கொடுப்பார் என்று மனு கொடுத்துள்ள திருநங்கை சுதா நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், ஜனவரி 20 முதல், பிப்ரவரி 6 வரை, விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டன. அதில் சிலரிடம், முதல்வர் நேர்காணல் நடத்தினார். விரைவில், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த திருநங்கை சுதா தலைமையில், திருநங்கையர், நேற்று மேளதாளங்களுடன், நடனமாடியபடி, அதிமுக அலுவலகம் வந்தனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்புகோரி, மனு கொடுத்தனர்.

அதிமுகவில் மனு
போயஸ் கார்டன் சென்ற திருநங்கைகள் முதலில் மனு கொடுத்தனர். இதனையடுத்தே மேள தாளத்துடன் ராயப்பேட்டை தலைமை அலுலவலகத்திற்கு வந்த திருநங்கைகள் மனு அளித்தனர். சுதா தனது மனுவில், நான் பல ஆண்டுகளாக, திருநங்கையர் மத்தியில் பணிபுரிந்து வருகிறேன்; அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான பணிகளை செய்து வருகிறேன்.

எம்.எல்.ஏ ஆக ஆசை
மற்ற மாநிலங்கள், நாடுகளில் உள்ள திருநங்கைகள்கூட தமிழகத்தில் வாழ விரும்புகின்றனர். அந்த அளவுக்கு தமிழகம் எல்லா வகையிலும் சிறந்து விளங்குகிறது. சட்டசபை தேர்தலில், திருநங்கையான எனக்கு, ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும். உலகிலேயே முதல் திருநங்கை எம்.எல்.ஏவை உங்களால் தான் உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார்.

காலதாமதம் ஏன்?
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுதா, அதிமுகவில் விருப்ப மனு பெறப்பட்டபோது, நாங்கள் யாரை தேர்வு செய்வது என்று பேசிக்கொண்டிருந்தோம். மாநில அளவில் திருநங்கைகளை ஒருங்கிணைத்து அங்கீகாரம் பெறுவது தொடர்பாக பல அமைப்புகளுடன் பேசிக் கொண்டிருந்தோம்.
அதனால், இவ்வளவு காலதாமதமாகிவிட்டது.

நம்பிக்கை இருக்கிறது
அதிமுகவில் விருப்பமனு பெறப்பட்டபோது எங்களால் மனு அளிக்க முடியவில்லை. தற்போதுதான் தொகுதி ஒதுக்க கேட்டு மனு அளித்துள்ளேன். இங்கு இன்னும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கவில்லை எனவே எனக்கு வாய்ப்பு தருவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.
முதல்வர் வீட்டிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனது கோரிக்கை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என நம்புவதாகவும் சுதா கூறியுள்ளார்.

நாம் தமிழர், தேமுதிக
திருநங்கைகள் மூன்றாவது பாலினமாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஓட்டுரிமையும் அளிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் தேவி என்ற திருநங்கை ஆர்.கே. நகரில் போட்டியிட உள்ளார். திருநங்கை ராதிகாவுக்கு சேலத்தில் வாய்ப்பு அளிப்பதாக தேமுதிக உறுதி அளித்திருக்கிறது.

திருநங்கைகள்
இந்நிலையில், வரும் சட்டசபைத் தேர்தலில் எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று பல்வேறு திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் இருக்கும் பல்வேறு திருநங்கைகள், தங்கள் சார்பாக சுதா என்ற திருநங்கையை முன்னிறுத்தி அதிமுகவில் போட்டியிட சீட் கேட்டு விருப்பமனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications