எதிர்பார்த்தபடி அமைந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு – டி.டி.வி. தினகரன்
நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், எதிர்பார்த்தபடியே அமைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்
சென்னை: உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறி்க்கை, நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சிசெய்த பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ஆட்சிசெய்த மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாரதிய ஜனதாவும் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைப்பதன் மூலம், தேர்தல் நடந்த மாநிலங்களில் ஆட்சிசெய்த கட்சிகளின் அரசு நிர்வாகத்தை மனதில் வைத்தே மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றாலும், மணிப்பூரில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியே மெல்லிய அறுதிப் பெரும்பான்மையோடு அதிகாரத்தை தக்கவைத்திருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கான அரசாக, மக்களின் சுபிட்சமான வாழ்வுக்கு வழிகாட்டும் அரசாக நடத்தப்படுகிறபோது தான் ஆளுகிற இயக்கமே ஆட்சியை தக்க வைக்கும் அரசியல் புரட்சி நிகழ்கிறது என்பதை மனதில் கொண்டு, ஜெயலலிதா சூளுரைத்தது போல, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க.வே தமிழகத்தை ஆளும் என்கிற நன்நோக்கத்தையே இலக்காக முன்னெடுப்போம் என்றுரைத்து, இந்த சட்டமன்றத் தேர்தல்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் வெற்றிகளை ஈட்டியிருக்கும் பா.ஜ.க.வுக்கும், ஏறத்தாழ 10 வருடங்களுக்குப் பிறகு பஞ்சாப்பில் அரியணை ஏறும் காங்கிரஸ் கட்சிக்கும், அதுபோலவே பா.ஜ.க.விடம் இருந்து கோவா மாநிலத்தை கைப்பற்றியதோடு, மணிப்பூரில் தங்களது ஆட்சியை தக்க வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அ.தி.மு.க. சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
