"சித்தி"யை சிறையில் சந்தித்து ஆலோசித்தார் "திஹார்" தினகரன்.. என்னெல்லாம் நடக்கப் போகுதோ!
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை இன்று பிற்பகலில் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை இன்று டிடிவி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜாமின் பெற்ற டிடிவி தினகரன் கடந்த சனிக்கிழமை சென்னை வந்தார். ஒருநாள் ஓய்வெடுத்த அவர் இன்று காலை கட்சி பணி கவனிக்க கிளம்பி விட்டார்.
அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளராக நீடிப்பதாக கூறும் டிடிவி தினகரன், பொதுச் செயலாளர் சசிகலாவை இன்று பெங்களுர் சிறையில் சந்தித்து ஆலோசித்து வருகிறார்.

திஹார் சிறை
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். அவர் திஹார் சிறையில் இந்த வழக்கில் சிக்கிய மேலும் மூவருடன் அடைக்கப்பட்டார்.

தினகரனுக்கு ஜாமீன்
இந்நிலையில் ஜாமின் கோரி, டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், டிடிவி தினகரனுக்கு ஜாமின் வழங்கியது. இதையடுத்து சனிக்கிழமை காலை டெல்லியில் இருந்து விமானம் சென்னை வந்தார்.

பெங்களூரு பயணம்
இந்தநிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறை அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திக்க இன்று காலையில் சென்னையில் இருந்து பெங்களூர் சென்றுள்ளார்.

சசிகலா உடன் சந்திப்பு
சிறை செல்லும் முன்பாக கட்சியை விட்டு ஒதுங்கியதாக கூறிய தினகரன், தற்போது தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார். இது குறித்து சசிகலா உடன் ஆலோசிக்கவே அவர் பெங்களூரு சென்றதாக கூறப்படுகிறது.

சசிகலா உடன் சந்திப்பு
பிற்பகலில் தனது சித்தி சசிகலாவை சந்தித்த தினகரன், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், கட்சியில் தனது நிலைப்பாடு குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

பல கோஷ்டிகள்
சசிகலாவும், தினகரனும் சிறை சென்ற பின்னர் கட்சிக்குள் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டன. சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களே பல கோஷ்டிகளாக பிரிந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தினகரன் பெங்களூரு சென்றுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதிரடி திருப்பம்
அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் அணி உள்ளது. ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உருவாகியுள்ளனர். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஈபிஎஸ் அமைச்சரவையில் இருந்து சிலர் நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தினகரன் பெங்களூரு சென்று திரும்பிய பின்னர் அதிமுகவில் அதிரடி திருப்பம் ஏற்படும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது.

தினகரன் நீடிப்பாரா?
தினகரன் கட்சிப் பணியைத் தொடர்வாரா? கட்சியில் சசிகலா குடும்ப ஆதிக்கம் மீண்டும் தலைதூக்குமா? இரு அணிகள் இணைப்பு கிடப்பில் போடப்படுமா? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கிடையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை, அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications