விரைவில் நாராயணசாமி- கிரண் பேடி "டக் ஆப் வார்".. காத்திருக்கும் புதுச்சேரி!
புதுச்சேரி: நமச்சிவாயத்திற்கு காங்கிரஸ் மேலிடம் ஏன முதல்வர் பதவியைத் தரவில்லை என்று இப்போது பலருக்கும் புரிந்திருக்கும். துணை நிலை ஆளுநராகப் பொறுப்பேற்றிருக்கும் கிரண் பேடி, புதுச்சேரி முதல்வருக்கு நிச்சயம் மிகப் பெரிய சவாலாக விளங்குவார் என்பதை புதுவை மக்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர். எனவேதான் நாராயணசாமியின் நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.
இன்று இல்லாவிட்டாலும் கூடிய விரைவிலேயே நாராயணசாமி - கிரண் பேடி இடையே டக் ஆப் வார் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்து விட்டது. கிரண் பேடியை சமாளிக்க அதிரடியான ஒருவர் தேவை என்பதால்தான் நாராயாணசாமியை கட்சி மேலிடம் நியமிக்க முடிவு செய்ததாக சொல்கிறார்கள்.
மேலும் புதுவையில் ஆள் அட்ரஸே இல்லாமல் உள்ள பாஜகவினரும் தற்போது உற்சாகத்துடன் களத்தில் குதிக்க ஆரம்பித்துள்ளனர். எனவே கிரண் பேடியை வைத்து புதுச்சேரியில் பாஜகவை வளர்க்க அக்கட்சி முயல்கிறதோ என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது. கிரண் பேடியை பாஜகவில் சேர்த்து, அவரை டெல்லி முதல்வர் பதவி வேட்பாளராக பாஜக மேலிடம் களம் இறக்கியது நினைவிருக்கலாம்.

முதல்வர் பதவிக்கு பயிற்சியா?
கிரண் பேடியின் நியமனம் பல்வேறு விதமாக பார்க்கப்படுகிறது. அவருக்கு முதல்வர் பதவியில் செயல்படுவது குறித்த "பயிற்சியாக" துணை நிலை ஆளுநர் பதவியை பலரும் பார்க்கின்றனர். அடுத்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் மீண்டும் கிரண் பேடியே பாஜக சார்பில் களம் இறக்கப்படுவார் என்றும், அதற்குள் அவர் நிர்வாக ரீதியான அனுபவத்தையும், நல்ல பெயர்யும் புதுவையில் பெற்று விட்டால் அது டெல்லி தேர்தல் களத்தில் உதவியாக இருக்கும் என்று பாஜக கணக்குப் போடுவதாக கூறுகிறார்கள்.

முதல்வர் போன்ற செயல்பாடுகள்
இது உண்மையாக இருக்குமோ என்றுதான் எண்ண வைக்கிறது கிரண் பேடியின் செயல்பாடுகளும். புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தது முதல், ஒரு முதல்வர் போலத்தான் செயல்பட ஆரம்பித்துள்ளார் கிரண்பேடி. முதல்வர் அறிவிக்க வேண்டியதையும், சொல்ல வேண்டியதையும் இவர் அதிகாரிகளுக்குக் கூறி வருகிறார். பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

நாராயணசாமி
கிரண்பேடி தனது அலுவலகத்தோடும், ராஜ்பவனோடும் முடங்கிப் போகக் கூடியவர் அல்ல என்பதை அவரது அன்றாட செயல்பாடுகள் வெளிப்படுத்துவதால், முதல்வராகப் பதவியேற்கவுள்ள நாராயணசாமிக்கு நிச்சயம் பெரிய சவாலாகவே இருக்கும் ஆளுநரை சமாளிப்பது.

ஆளுநருக்கே "பெரியவர்"
பிற மாநில ஆளுநர் பதவி போல அல்ல புதுச்சேரி ஆளுநர் பதவி. இது யூனியன் பிரதேசம் என்பதாலும், மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் ஆளுநர் பதவிதான் இங்கு பெரியது. ஆளுநரைப் பகைத்துக் கொள்ள முடியாது. அதை விட முக்கியமாக மத்திய அரசை விமர்சிக்க முடியாது. எந்த முடிவாக இருந்தாலும் மத்திய அரசின ஒப்புதல் தேவை என்று ஏகப்பட்ட லொட்டு லொசுக்குகள் உள்ளன. புதிய ஆட்சியமைக்கவே, மத்திய அரசின் உள்துறையின் அனுமதி பெற்றாக வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதனால்தான் நாராயணசாமி இன்னும் பதவியேற்காமல் உள்ளார்.

உற்சாகத்தில் பாஜக
பாஜகவைச் சேர்ந்த கிரண் பேடி துணை நிலை ஆளுநராக வந்திருப்பதால் புதுச்சேரி பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு தடபுடலாக அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளனர். தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் மதுக் கடைகள் செயல்படும் நேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் கிரண் பேடிக்கு வைத்துள்ளனர்.

சண்டை கண்டிப்பாக இருக்கும்
கிரண்பேடி நிச்சயம் அதிரடியாக செயல்படுவார். அதிரடி உத்தரவுகளைப் பிறப்பிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், டக்கென எளிதில் பணிந்து போகக் கூடியவர் அல்ல நாராயணசாமி. அதிரடியாக செயல்படக் கூடியவரும் கூட. போராடக் கூடியவரும் கூட. எனவே நிச்சயம் புதுச்சேரி அரசியல் களம் படு சூடாகவே இருக்கும் என்று இப்போதே பேச ஆரம்பித்து விட்டார்கள்.












Click it and Unblock the Notifications